மன்னார் தொடக்கம் மாத்தளை வரையில் பாத யாத்திரை! மலையக எழுச்சி பயணம் ஆரம்பம்(Photos)
மலையக தமிழர்களுக்கும் சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும், காணி உரிமை அவசியம், பெருந்தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்க வேண்டும் என்பன உட்பட 10 பிரதான கோரிக்கைகளை முன்வைத்து 'மலையக எழுச்சி பயணம்' ஆரம்பமாகவுள்ளது.
2023 ஜுலை 28 ஆம் திகதி தலைமன்னாரில் ஆரம்பமாகவுள்ள குறித்த பாத யாத்திரை ஆகஸ்ட் 12ஆம் திகதி மாத்தளையை வந்தடையவுள்ளது.
இந்த பாத யாத்திரையின் மொத்த தூரம் 252 கிலோமீற்றர்களாகும்.
இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றம், சிவில் அமைப்புகள் மற்றும் மலையக சமூகம்சார் செயற்பாட்டாளர்களை உள்ளடக்கிய “மாண்புமிகு மலையக மக்கள்" கூட்டிணைவினால் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
200 ஆவது வருடப்பூர்த்தி
தமது வருகையின் 200 ஆவது வருடப்பூர்த்தியை நினைவுகூரும் மலையகத் தமிழ் சமூகத்தினர், முழுமையான மற்றும் சமமான பிரஜைகளாக, இலங்கை வாழ்வில் முழுமையாக, அர்த்தமுள்ளதாக பங்கேற்பதற்காக சில கோரிக்கைகளை முன்வைப்பதாக ஏற்பாட்டாளர்களால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1.எமது வரலாறு, போராட்டம் மற்றும் பங்களிப்பினை ஏற்று அவற்றை அங்கீகரித்தல்.
2.ஏனைய பிரதான சமூகங்களுக்கு இணையான ஒரு தனித்துவமான அடையாளத்தைக் கொண்ட, சுதந்திரத்திற்குப் பின்னரான இலங்கையின் ஒரு பகுதி மக்களாக அங்கீகாரம்.
3.தேசிய சராசரிகளுடன் சமநிலையை எட்டுவதற்காக விசேடமாக இச் சமூகத்தை இலக்கு வைத்து விசேட செயற்பாடுகளை செயற்படுத்தி கல்வி, சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மீதான உறுதியான நடவடிக்கை.
4.வாழ்விற்கான ஓர் ஊதியம், கண்ணியமான வேலை, சட்டப்பாதுகாப்பு, ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு சமமான ஊதியம்.
5.தொழிலாளர்களிலிருந்து சிறு நில உடமையாளர்களாக மாறும் பொருட்டு வீடமைப்பு மற்றும் வாழ்வாதாரங்களுக்கான பாதுகாப்பான உரிமைக்காலத்துடனான காணி உரிமை
6.தமிழ் மொழிக்கு சமமான பயன்பாடு மற்றும் சம அந்தஸ்து.
7.அரசாங்க சேவைககளை சமமான அணுகல்.
8.பெருந்தோட்டங்களிலுள்ள மனிதக் குடியேற்றங்களை புதிய கிராமங்களாக நிர்ணயம் செய்தல்.
9.வீட்டுப் பணியாளர்களின் ழுதுமையான பாதுகாப்பு.
10.மலையகக் கலாசாரத்தை பேணுதல் மற்றும் மேம்படுத்துதல்.
11.அரசாங்கத்தின் அனைத்து மட்டங்களிலும் ஆளுகையில் ஓர் அர்த்தமுள்ள வகிபங்கை வழங்கும் ஒப்புரவான மற்றும் உள்ளடங்கலான தேர்தல் முறைமை மற்றும் அதிகாரப் பகிர்வு இவை இறுதிப்படுத்தப்பட்ட கோரிக்கைகள் அல்ல, பாத யாத்திரையின்போது பலரும் யோசனைகளை முன்வைக்கலாம்.
கோரிக்கை ஆவணம்
மேற்கூறியவற்றை எல்லாம் உள்வாங்கி, கருத்தாடலை உருவாக்கி மேலும் பல கோரிக்கைகளை உள்வாங்கி, இறுதிபடுத்தப்பட்ட கோரிக்கை ஆவணம் முன்வைக்கப்படும்.
அதேவேளை, பாத யாத்திரைக்கு அனைத்து இன மக்களும் ஆதரவும், பங்களிப்பும் வேண்டும் என ஏற்பாட்டுக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.
பாத யாத்திரையில் முழுமையாக பங்கேற்காவிட்டாலும் ஒரு நாளாவது - அதிலும் குறிப்பிட்ட நேரமாவது பங்கேற்றால் அது பேருதவியாக அமையுமெனவும் ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.
மலையக மக்கள் தொடர்பில் அனுதாபம் தெரிவிப்பதைவிட, அவர்களின் உரிமைகளுக்காகவும்
குரல் கொடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.




