மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையில் இந்திய அரசின் நிதியுதவி! வடக்கு ஆளுநரின் கருத்து
மன்னார் மாவட்ட மக்கள் கடந்த காலங்களில் தாங்கள் போதிய கவனம் பெறவில்லை என்ற உணர்வுடன் இருந்ததை நான் அறிவேன். ஆனால், இந்த நிலைமை படிப்படியாக மாறிக் கொண்டிருக்கிறது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையில் இந்திய அரசின் 600 மில்லியன் ரூபா நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று (16.09.2026) நடைபெற்றபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கத்தின் 600 மில்லியன் ரூபா நன்கொடை உதவியுடன் உருவாகவுள்ள இந்தப் பிரிவு, அவசர நிலைகளில் எமது மக்களுக்கு விரைவானதும் ஒருங்கிணைந்ததுமான மருத்துவ சேவையை வழங்குவதற்கு மிகவும் முக்கியமானதாக அமையும்.
நிதியுதவி
மன்னார் மாவட்ட மக்களின் சார்பில், இந்தப் பெறுமதியான உதவிக்காக இந்திய மக்களுக்கும், இந்திய அரசாங்கத்துக்கும், இந்தியப் பிரதமர் மேன்மைதங்கிய நரேந்திர மோடிக்கும், இங்கு பிரதி நிதித்துவப்படுத்தும் இந்திய உயர் ஸ்தானிகர் ஊடாக எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மன்னார் மாவட்டத்தின் சுகாதாரத் தேவைகளிலும் இதே அணுகுமுறை காணப்படுகிறது. ஜனாதிபதி தலைமையின் கீழும், சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் பங்களிப்புடனும், மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையின் மேம்பாட்டுக்காக நாம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

மன்னார் மாவட்டத்தின் சுகாதாரத் துறையை இன்னும் வலுப்படுத்துவதில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து தொடர்ந்து பணியாற்றுவோம்.
இன்று நடுகை செய்யப்படும் இந்த அடிக்கல் விரைவில் ஒரு நவீன மருத்துவக் கட்டமைப்பாக எழுந்து, ஆயிரக்கணக்கான எமது மக்களின் உயிருக்கும் நலனுக்கும் பாதுகாப்பாக அமையட்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
புதிய கட்டிடத்தில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு, தீவிர சிகிச்சைப் பிரிவு, படப்பதிவு மற்றும் நோயறிதல் வசதிகள், எக்ஸ்-கதிர் மற்றும் சி.ரி. ஸ்கேன் வசதிகள், ஆய்வுகூடம், வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட முக்கிய மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன.

