25 வருடங்களின் பின் வரலாற்றுச் சாதனை படைத்த இலுப்பைக்கடவை தமிழ் மகா வித்தியாலய வீரர்கள் (Photos)
வடமாகாண பாடசாலைகளுக்கிடையே நடத்தப்பட்ட 18 வயதுப் பிரிவு ஆண்களுக்கு இடையிலான உதைபந்தாட்ட தொடரில் வரலாற்றுச் சாதனை படைத்த மன்னார் மாவட்ட இலுப்பைக்கடவை தமிழ் மகா வித்தியாலய பாடசாலை வீரர்கள் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிகழ்வு இன்று (10.08.2023) மாலை பாடசாலையில் இடம்பெற்றுள்ளது.
பாடசாலையின் அதிபர் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் மடு வலயக்கல்விப் பணிப்பாளர் ஏ.கே.வொலன்ரைன் கலந்து கொண்டார்.
இதன்போது சாதனை படைத்த மாணவர்கள் விருந்தினர்களினால் பதக்கம் அணிவிக்கப்பட்டு, பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இறுதிச் சுற்றில் வெற்றி
குறித்த போட்டியில் வடமாகாணத்தில் உள்ள பாடசாலைகளைச் சேர்ந்த 39 பாடசாலை அணிகள் கலந்து கொண்டிருந்தனர். இறுதிச் சுற்றில் மன்னார் கல்வி வலயத்தை சேர்ந்த மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை அணியும், மடு கல்வி வலயத்தை சேர்ந்த இலுப்பைக்கடவை தமிழ் மகா வித்தியாலய அணியும் மோதிக் கொண்டது.
இதன் போது மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி அணியினை எதிர்கொண்டிருந்த இலுப்பைக்கடவை தமிழ் மகா வித்தியாலய அணி 2:1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று தேசிய மட்ட போட்டியில் விளையாடுவதற்குரிய வாய்ப்பை பெற்றுள்ளது.
25 வருடங்களின் பின்னர் மன்னார் மாவட்டத்தின் மடு வலயத்தில் உள்ள இலுப்பைக் கடவை பாடசாலையின் 18 வயதுப்பிரிவு ஆண்கள் முதன் முறையாக உதைப்பந்தாட்டத்தில் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.