அர்ச்சுனாவுக்கு கைத்துப்பாக்கி அனுமதி வழங்க முடியாது..! மணிவண்ணன் காட்டம்
குற்றவியல் வழக்குகள் நீதிமன்றில் நிலுவையில் உள்ள ஒருவருக்கு கைத்துப்பாக்கி வைத்திருக்க அனுமதி வழங்க முடியாது என சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் துப்பாக்கி காட்டி மிரட்டிய சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணையில்,அர்ச்சுனா இராமநாதனுடன் முரண்பட்ட தரப்பினர் சார்பில் மன்றில் முன்னிலையாகியிருந்தார்.
வழக்கு விசாரணை முடிவடைந்த பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அர்ச்சுனா எம்.பியின் விளக்கமறியலை நீடிக்கக் கோரிக்கை
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதனுக்கு எதிராக பல்வேறு குற்றவியல் வழக்கு விசாரணைகள் நீதிமன்றங்களில் நடைபெற்று வருவதனால், அவர் துப்பாக்கி வைத்திருப்பதற்கான அனுமதியினை வழங்கி இருக்க முடியாது.
இவர் தன்னிடம் துப்பாக்கி இருப்பதாக கூறி இதற்கு முன்னரும் பல்வேறு இடங்களில் துப்பாக்கியை காட்டி மிரட்டியிருக்கிறார். சமூகத்தை பயமுறுத்தும் வகையில் தன்னிடம் உள்ள துப்பாக்கியை பயன்படுத்துகிறார் என நீதிமன்றிலும் சுட்டிக்காட்டி அர்ச்சுனாவின் விளக்கமறியலை நீடிக்குமாறு மன்றிடம் கோரினேன்.

ஆனால் இளவாலை பொலிஸார் விளக்கமறியலை நீடிக்க வேண்டிய தேவையில்லை எனவும், தமது விசாரணைகளை முடிவைடைந்து விட்டன என கூறினார். அதனால் பிணையில் செல்ல மன்று அனுமதித்தது. ஆனாலும் அவரது துப்பாக்கி சான்று பொருளாக மன்றில் பாரப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், துப்பாக்கி அனுமதி தொடர்பில் மேலதிக அறிக்கையை மன்றில் சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைகளை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 19ஆம் திகதிக்கு திகதியிட்டுள்ளது என்றார்.