மணிப்பூர் கலவரத்தில் பல தமிழ் குடும்பங்கள் பாதிப்பு! தமிழக முதல்வருக்கு பழ.நெடுமாறன் விடுத்துள்ள வேண்டுகோள்
மணிப்பூர் கலவரம் தொடர்பில் தமிழக முதல்வருக்கு, உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
மணிப்பூரில் பழங்குடியின மக்களுக்கும், மாற்று சமூகத்தினருக்கும் ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்த நிலையில், மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நிலைமையை கட்டுப்படுத்த கூடுதல் துணை இராணுவத்தை மத்திய அரசு மணிப்பூர் அனுப்பியுள்ளது.
தமிழ்க் குடும்பங்கள்
இது தொடர்பில் பழ.நெடுமாறன் கூறுகையில்,மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கலவரத்தில் 40க்கும் மேற்பட்ட தமிழ் குடும்பங்களின் வீடுகள், கடைகள் எரிக்கப்பட்டுள்ளன என்ற செய்தியை அங்குள்ள தமிழர்கள் எனக்கு தெரிவித்துள்ளனர்.
மணிப்பூரில் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்க் குடும்பங்கள் வாழ்கின்றன.
அங்கு வாழும் தமிழ்க் குடும்பங்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்கவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்கள் இழப்பீடு பெறவுமான அவசர நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளும்படி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை வேண்டிக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று (04.05.2023) மணிப்பூர் முதலமைச்சர் என்.பிரேன் சிங்கிடம் பேசி உள்ளார். மாநிலத்தின் தற்போதைய நிலைமை குறித்து அவர் கேட்டறிந்துள்ளார்.
இதற்கிடையில் மணிப்பூர் முதலமைச்சர் வீடியோ அறிக்கை ஒன்றை வெளியிட்டு, அமைதி காக்குமாறு மாநிலத்தின் எல்லா சமூகத்தினரிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.