எங்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு சபையை நடாத்துங்கள் - மானிப்பாய் தவிசாளர் மீது கோபமடைந்த உறுப்பினர்
மானிப்பாய் பிரதேச சபையில் தொடர்ச்சியாக உறுப்பினர்கள் சத்தமிட்டு பேசுவதால் தங்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு சபையை நடாத்துங்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரான எட்வெட் மரியவாசினி தவிசாளரை தெரிவித்துள்ளார்.
மானிப்பாய் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்று இடம்பெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், "நாங்களும் எமது மக்களின் பிரச்சினைகள் தொடர்பான கோரிக்கைகளை சபைக்கு கொண்டுவந்தாலும் அதனை சபையில் முன்வைக்க முடிவதில்லை.
நேரம் ஒதுக்குங்கள்..
முன்னால் இருப்பவர்களே தொடர்ந்து எழுந்து கதைக்கின்றார்கள், பிரச்சினைப்படுகின்றார்கள். ஆகையால் சபையில் கதைப்பதற்கு எங்களுக்கு சந்தர்ப்பம் கிடைப்பதில்லை.
ஒவ்வொரு விடயத்திற்கும் ஒவ்வொருத்தருக்கும் குறிப்பிட்ட அளவு நேரத்தை ஒதுக்கி வழங்குங்கள். இல்லாவிட்டால் எங்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு நீங்கள் சபையை நடத்துங்கள்" என்றார்.
இதற்கு பதிலளித்த தவிசாளர் ஜெசீதன், "அனைவரும் கருத்துரைப்பதற்கு தான் இந்த சபை. இந்த சபையின் விதிகளை ஏற்று நடக்குமாறு நான் ஒவ்வொரு கூட்டத்திலும் அறிவுறுத்தி வருகிறேன்.
அதை கருத்தில் கொள்ளாமல் சில சந்தர்ப்பங்களில் உணர்ச்சி வசப்பட்டுத்தான் பிரச்சினைகளுக்குள் செல்கின்றார்கள். தயவுசெய்து அனைவரும் உணர்ச்சிவசப்படாமல் பிரச்சினைகளை எவ்வாறு கையாள்வது என அறிந்து அடுத்த சபை அமர்வுகளில் அவ்வாறு உங்களது கருத்துரைகளை தெரிவியுங்கள்" என்றார்.



