புவிசார் பொருளாதார கருவித்தொகுப்பைப் பயன்படுத்தியுள்ள சீனா
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் தனது நலன்களைப் பாதுகாப்பதற்கான சீனாவின் முயற்சிகளில், இலங்கைக்கான அபிவிருத்தி நிதியுதவிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க-சீனா பொருளாதார மற்றும் பாதுகாப்பு மறுஆய்வு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த முயற்சிகள் இருந்தபோதிலும், சீனா தனது பொருளாதார உறவுகளை குறிப்பிடத்தக்க அரசியல் அல்லது பாதுகாப்பு ஆதாயங்களாக மாற்றவில்லை என்று ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் 15ஆம் திகதியன்று இந்த ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட அறிக்;கையில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இலங்கையில் புவிசார் அரசியல் நோக்கங்களை அடைய சீனா ஏற்கனவே அதன் புவிசார் பொருளாதார கருவித்தொகுப்பைப் பயன்படுத்தியுள்ளது.
புவிசார் பொருளாதார தொகுப்பு
இலங்கையில் உள்ள அரசியல் கட்சிகள் மத்தியில் சீனா கணிசமான உள்நாட்டு அரசியல் செல்வாக்கையும் கொண்டுள்ளது. சீனாவால் 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்கப்பட்ட ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு சீனக் கப்பல் சென்றமையானது, சீனா தனது பொருளாதாரச் செல்வாக்கை எவ்வாறு பாதுகாப்பு நோக்கத்தை அடையப் பயன்படுத்துகிறது என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
இந்த ஆண்டு ஜூலை மாதம் மக்கள் எழுச்சிக்குப் பின்னர் இலங்கை தூள் தூளாகி வருகிறது. இந்தநிலையில், கடன் மறுசீரமைப்பில் சீன தாமதத்துடன், விடயங்கள் மோசமாகிவிட்டன. இந்தியாவும் ஜப்பானும் ஏற்கனவே கொழும்புடன் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக பேச்சுவார்த்தையை ஆரம்பித்துள்ளன.
எனினும் சீனாவின் தாமதம் நலிவடைந்த பொருளாதாரத்திற்கு மேலும் சுமையை ஏற்படுத்தும். மேலும் தாமதமானது பொருளாதார நெருக்கடி காரணமாக மற்றொரு பொது எழுச்சியைத் தூண்டலாம் என்றும் அமெரிக்க-சீனா பொருளாதார மற்றும் பாதுகாப்பு மறுஆய்வு ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் பட்டுப்பாதை என்ற பெல்ட் அண்ட் ரோட் முன்முயற்சியை (பிஆர்ஐ) ஏற்றுக்கொண்ட உலகளாவிய தெற்கில் உள்ள பல நாடுகளுக்கு இலங்கையின் நெருக்கடி, ஒரு எச்சரிக்கையை வழங்கும் என்றும் அமெரிக்க-சீனா பொருளாதார மற்றும் பாதுகாப்பு மறுஆய்வு ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கை கூறுகிறது.
ஜனாதிபதி விக்ரமசிங்க, மற்றுமொரு எழுச்சி ஏற்பட்டால், அவசரகால அதிகாரங்களையும் இராணுவத்தையும் பயன்படுத்தி முறியடிக்கப் போவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியிருப்பது, அவர், ராஜபக்ச ஆட்சியின் நிழலில் இருந்து தொடர்வதை மட்டுமே உறுதி செய்கிறது.
அத்துடன் அது, இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவியை பாதிக்கும். அதேநேரம் சீனாவின் கடனை மறுசீரமைப்பதில் ஏற்படும் தாமதம், பொருளாதார ஸ்திரத்தன்மையை பாதிக்கும் மற்றும் பொருளாதார நிலைமைகளை மேலும் சீரழிக்க வழிவகுக்கும்.
இது தொடர்ந்தால், எழுச்சி ஒரு தேர்வாக இருக்காது, தவிர்க்க முடியாததாக
இருக்கும் என்றும் அமெரிக்க-சீனா பொருளாதார மற்றும் பாதுகாப்பு மறுஆய்வு
ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கை எச்சரித்துள்ளது.