பெண்களை ஏமாற்றி தங்க நகைகளை மோசடி செய்த நபர் - விசாரணையில் வெளியான தகவல்
கம்பஹா - பியகம பகுதியில் அலங்கார பொருட்கள் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தின் ஊழியர் ஒருவர், திருமணங்களுக்கு செல்வதாகக்கூறி பெண் ஊழியர்களிடமிருந்து தங்க நகைகளை அடகு வைத்து மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் நேற்று (25) பியகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தன்னோடு பணிபுரியும் பெண் ஊழியர்களிடம் இருந்து திருமணங்களுக்கு செல்வதாகக்கூறி 25 இலட்சத்திற்கும் மேல் மதிப்புள்ள தங்க நகைகளை சந்தேகநபர் பெற்றுள்ளார்.
ஐந்து பெண் ஊழியர்களிடமிருந்து முறைப்பாடுகள்
இது தொடர்பாக இதுவரை ஐந்து பெண் ஊழியர்களிடமிருந்து முறைப்பாடுகள் பெறப்பட்டுள்ளன.

இவர்களிடமிருந்து பெறப்பட்ட தங்க நகைகள், கடுவெல மற்றும் பியகம - பண்டாரவத்தையில் உள்ள தங்க நகை அடகுக்கடைகளில் அடகு வைக்கப்பட்டுள்ளன.
தங்க நகைகளை அடகு வைத்து பெற்ற பணத்தை, சந்தேகநபர் தான் கட்டிவரும் வீட்டிற்கு தேவையான மரச்சாமான்கள் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்களை வாங்குவதற்காக செலவழித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர், பியகமவை சேர்ந்த 42 வயதுடையவர் என்றும், அவர் மஹர நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.