பேஸ்புக் ஊடாக மக்களை ஏமாற்றி பல கோடி ரூபாய் மோசடி செய்த நபர்! பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை
இலங்கையில் பேஸ்புக் ஊடாக மக்களை ஏமாற்றிய நபர் தொடர்பான முறைப்பாடுகளை மிரிஹான விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவில் சமர்ப்பிக்குமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொள்கின்றனர்.
நிறுவனமொன்றின் ஊடாக இலகுவான கட்டண முறையில் வீடுகளை நிர்மாணித்து கொடுப்பதாக கூறி பேஸ்புக் விளம்பரங்களை வெளியிட்ட நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் பல்வேறு நபர்களை ஏமாற்றி கோடி கணக்கான ரூபாவை மோசடி செய்துள்ளார்.
நிதி மோசடிகள்
இது தொடர்பான முறைப்பாட்டிற்கமைய, மிரிஹான விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சந்தேகநபருக்கு எதிராகப் பெருமளவிலான நிதி மோசடிகள் தொடர்பில் 16 முறைப்பாடுகள் இதுவரை கிடைத்துள்ளது.
அத்துடன், மேலும் பல முறைப்பாடுகள் எதிர்காலத்தில் கிடைக்கப் பெறவுள்ளதாகப் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சந்தேகநபருக்கு எதிராக 10 திறந்த பிடியாணைகளும் 5 திகதியிடப்பட்ட பிடியாணைகளும் உள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கும் குறித்த நிறுவனம் நுகோகொட ஹைலெவல் வீதியில் கட்டடமொன்றில் பேணப்பட்டு வந்தது. அத்துடன், அதன் பணிப்பாளர் எனத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு சந்தேகநபர் நீண்ட காலமாக இந்த நிதி மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தச் சந்தேகநபருக்கு எதிராக உள்ள முறைப்பாடுகளை மிரிஹான விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவில் சமர்ப்பிக்குமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொள்கின்றனர்.
சந்தேகநபர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
மேல் மாகாண வடக்கு பிரதிப் பொலிஸ் மாஅதிபர் சமந்த விஜேசேகரவின் மேற்பார்வையின் கீழ் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.