மட்டு நகரில் திருடப்பட்ட 18 துவிச்சக்கரவண்டிகளுடன் ஒருவர் கைது(Photo)
மட்டக்களப்பு நகரில் துவிச்சக்கரவண்டிகளை திருடி வந்த காத்தான்குடியை சேர்ந்த ஒருவர் நேற்று(07) கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது திருடப்பட்ட 18 துவிச்சக்கரவண்டிகளை மீட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மட்டு அரசடி பகுதியில் உள்ள தனியார் கம்பனி ஒன்றிற்கு முன்னால் நேற்று நிறுத்திவைக்கப்பட்டிருந்த துவிச் சக்கரவண்டியை ஒருவர் திருடும் போது அந்த தனியார் கம்பனி பணியாட்கள் குறித்த திருடனை மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கைது
இதனையடுத்து குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தினமும் காத்தான்குடியில் இருந்து பேருந்தில் பயணித்து மட்டு நகருக்கு வருகை தந்துள்ளார்.
பின்னர், அங்கு வீதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் துவிச்சக்கரவண்டிகளை திருடிக் கொண்டு சென்று அதனை காத்தான்குடி பிரதேசத்தில் 17 ஆயிரம் ரூபா தொடக்கம் 25 ஆயிரம் வரைவில் விற்பனை செய்துள்ளார். சில துவிச்சக்கரவண்டிகளை கழற்றி பாகங்களாகவும் விற்பனை செய்துள்ளார்.
குறித்த நபர் போதைக்கு அடிமையான நிலையில் அதற்கு பணத் தேவைக்காக துவிச்சக்கரவண்டிகளை திருடி விற்பனை செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பொலிஸ் நடவடிக்கை
கைது செய்யப்பட்டவரை இன்று(8) நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் துவிச்சக்கரவண்டிகளை திருட்டுக் கொடுத்தவர்கள் பொலிஸ் நிலையத்திற்கு சென்று துவிச்சக்கரவண்டிகளை அடையாளம் காண்பித்து அதனை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



