அமெரிக்க ஜனாதிபதியை கொலை செய்ய திட்டமிட்ட நபர் கைது
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை கொலை செய்யத் திட்டமிட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
27 வயதான டேவிட் கய்லஸ் ரிவ்ஸ் என்ற நபரே அமெரிக்க ஜனாதிபதியைக் கொலை செய்யத் திட்டமிட்டிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நபர் கடந்த ஜனவரி 28 ஆம் திகதி முதல் பெப்ரவரி முதலாம் திகதி வரை வெள்ளை மாளிகைக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
ஒரு சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியைக் கொலை செய்யப் போவதாகவும் கூறியுள்ளார்.அந்த நபரின் தொலைபேசி அழைப்புகள் ஊடாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் எப்.பி.ஐ. பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.
ஜனாதிபதியைக் கொலை செய்யப்போவதாகவும் புலனாய்வுப் பிரிவுகளை அழிக்கப்போவதாக அந்த நபர் கூறியிருந்ததாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஜனாதிபதி உயிரிழக்கும் வரை தாக்கப் போவதாகவும் அவர் இறக்கும் வரை அவரது ஆசனத்திலிருந்து வேடிக்கை பார்க்கப்போவதாகவும் இந்த நபர் கூறியுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள இந்த நபருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியமை, குடும்ப தொந்தரவு, பயங்கரவாத அச்சுறுத்தல், அது சம்பந்தமான செயற்பாடுகள், பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கியமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும் இந்த நபர் மன ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளவர் என அவரது சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.