எரிபொருள் நிரப்பு நிலையம் மீது தாக்குதல் : ஒருவர் கைது
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளினை பெற்றுக்கொள்ள வந்த நபர் ஒருவர் தாக்குதல் நடத்தியதில் அலுவலகம் சேதமடைந்துள்ளது.
இந்த சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரை புதுக்குடியிருப்பு பொலிசார் கைது செய்துள்ளனர்.
மேலதிக விசாரணை
கைதுசெய்யப்பட்ட நபரை இன்று 01.06.2022 நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் புதுக்குடியிருப்புபொலிசார் ஈடுபட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளார்கள்.
சம்பவம் தொடர்பில் வெளியான கருத்து
இது தொடர்பில் புதுக்குடியிருப்பு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவர் வ.அன்னலிங்கம் கருத்து தெரிவிக்கையில்,
மக்களுக்கு சேவை செய்யவேண்டும் எல்லோருக்கும் எரிபொருள் கிடைக்கவேண்டும் என்பதற்காகவும் பரீட்சை எழுதுபவர்களுக்காகவும் அத்திய அவசிய தேவைகளுக்காகவும் அனுமதியுடன் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் எரிபொருளினை வழங்கி வருகின்றோம்.
இவ்வாறானவர்களின் செயற்பாடு மனவருத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது. எரிபொருள் தட்டுப்பாடான நேரத்தில் ஏற்படுகின்ற நெருக்கடிகளை ஊடகம் ஊடாக மக்களுக்கு தெரிவிக்கின்றேன். இது தொடர்பில் வடபிராந்திய எரிபொருள் கூட்டுதாபன அதிகாரிகளுடன் கதைத்துள்ளோன்.
தொடர்ந்தும் எரிபொருள் வழங்குவதாக இருந்தால் பொதுமக்கள் ஒத்துழைப்பினை தரவேண்டும். இவ்வாறு முரண்டு பிடிப்பார்களேயானால் எமது எரிபொருள் நிரப்பு நிலையத்தினையும் பணியாளர்களையும் அதன் சொத்துக்களையும் பாதுகாத்துக்கொள்ளும் நோக்கில் இலங்கையில் 90 எரிபொருள் நிரப்பு நிலையம் மூடப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.