இந்தியாவுடன் மாலைதீவு நட்புக்கரம்!
மாலைதீவு ஜனாதிபதி முகமது முய்சு அரசுமுறைப் பயணமாக விரைவில் இந்தியா வரவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியாவுடன் சமீப காலமாக எதிர்ப்புப் போக்கக் கடைப்பிடித்துக் கொண்டிருந்த மாலைதீவு அரசாங்கத்தின் நடவடிக்கையில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவுடன் முன்னர் நட்புப் பாராட்டிய நாடான மாலைதீவு கடந்த ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், சீனாவுக்கு நெருக்கமான முகமது மூயிஸ் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக்கொண்டார்.
இந்திய இராணுவப் படை
பதவியேற்ற குறுகிய காலத்திலேயே, அவர் மாலைதீவில் இருந்த இந்திய இராணுவப் படையை வெளியேற்றினார்.
கடல்சார் கண்காணிப்புக்காக இந்திய இராணுவம் அதிநவீன உலங்கு வானுர்திகள், நவீன விமானம் உள்ளிட்டவற்றை மாலைதீவுக்கு வழங்கியிருந்தது.
இந்தக் கருவிகளை இயக்குவதற்காக சுமார் 100 இந்திய இராணுவ வீரர்கள் மாலைதீவில் இருந்தனர்.
அவர்களை வெளியேற்றியதால், இந்தியா– மாலைதீவு இடையேயான உறவில் விரிசல் விழுந்தது.
இந்நிலையில், நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராகப் பதவியேற்கும் நிகழ்ச்சிக்கு மாலைதீவு அதிபர் முகமது முய்சுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் பதவியேற்பு விழாவில் முகமது மூயிஸ் கலந்து கொண்டார்.
சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்
இதையடுத்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், கடந்த மாதம் மாலைதீவு சென்றிருந்தார்.
இந்நிலையில் மாலைதீவு ஜனாதிபதி முகமது முய்சு, முதல்முறையாக அரசுமுறைப் பயணமாக விரைவில் இந்தியா வரவுள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
முகமது முய்சு, அடுத்த வாரம் டெல்லி வரவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால் இந்தியா– மாலைதீவு நாடுகள் இடையே மீண்டும் இணக்கமான சூழல் உருவாகியுள்ளது.
FTA எனப்படும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை உருவாக்கும் முயற்சிகளை இந்தியா தொடங்கியுள்ளதாக மாலைதீவு அமைச்சர் முகமது சயீத் தெரிவித்துள்ளார்.
மாலைதீவுடன் இந்தியா சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள முயற்சி மேற்கொள்வதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதேசமயம் சமீபத்தில் நடந்த மாலைதீவு சுதந்திரதின விழாவில் கலந்து கொண்டு பேசிய அந்நாட்டின் ஜனாதிபதி முய்சு இந்தியாவுக்கு நன்றி தெரிவித்தார்.
மேலும், இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்தும் அவர் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |