மலேசியாவின் முன்னாள் பிரதமருக்கு சிறை தண்டனை! அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய தீர்ப்பு
மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், பல பில்லியன் டொலர் மதிப்பிலான நிதி ஊழல் தொடர்பான இரண்டாவது பெரிய வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு, அவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
72 வயதான நஜிப் மீது சுமத்தப்பட்டிருந்த 4 அதிகார துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகள் மற்றும் 21 பணமோசடி குற்றச்சாட்டுகள் என மொத்தம் 25 குற்றச்சாட்டுகளும் உறுதிசெய்யப்பட்டுள்ளதாகப் புத்ராஜெயாவில் உள்ள உயர் நீதிமன்றம் நேற்று(26.12.2025) அறிவித்துள்ளது.
15 ஆண்டுகள் சிறைத்தண்டனை
சுமாராக 2.3 பில்லியன் மலேசிய ரிங்கிட் ( சுமாராக 569 மில்லியன் டாலர்) நிதியை முறைகேடாகத் தனது தனிப்பட்ட கணக்கிற்கு மாற்றியதாக இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்தத் தீர்ப்பின்படி, அதிகார துஷ்பிரயோகத்திற்காக தலா 15 ஆண்டுகள் வீதமும், பணமோசடி குற்றச்சாட்டுகளுக்காக தலா 5 ஆண்டுகள் வீதமும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இருப்பினும், மலேசிய சட்டப்படி இந்தத் தண்டனைகள் அனைத்தையும் அவர் ஒரே நேரத்தில் அனுபவிக்க வேண்டும் என்பதால், அவர் அதிகபட்சமாக 15 ஆண்டுகள் சிறையில் இருக்க நேரிடும்.
அத்துடன், அவருக்கு 11.4 பில்லியன் ரிங்கிட் (சுமார் 2.8 பில்லியன் டாலர்) அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

தன்னுடைய வங்கி கணக்கிற்கு வந்த பணம் சவூதி மன்னர் கொடுத்த நன்கொடை என்று நஜிப் தரப்பு வாதிட்ட போதிலும், போதியளவு ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால் நீதிபதி அந்த வாதத்தை நிராகரித்துள்ளார்.
சிறையில் இருக்கும் மனைவி
தற்போது, இந்தத் தீர்ப்பு மலேசிய அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் இது ஒரு மைல்கல் என்று விமர்சகர்கள் வரவேற்றாலும், நஜிப்பின் ஆதரவாளர்கள் நீதிமன்றத்திற்கு வெளியே திரண்டு தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

நஜிப்பின் மனைவி ரோஸ்மா மன்சூரும் ஏற்கனவே ஊழல் வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று மேல்முறையீட்டில் உள்ளார். அத்துடன், 15 ஆண்டுகள் சிறைக்கு போகும் நஜிப் ஏற்கனவே மற்றொரு வழக்கில் தண்டனை பெற்று கடந்த 2022 முதல் சிறையில் இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.