ஞானசாரவின் பொது மன்னிப்பு:மைத்திரிபாலவின் ஊடக அறிக்கையால் ஏற்படபோகும் பாரிய ஆபத்து...
கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்துவின் அரசசார்பற்ற நிறுவனம் மற்றும் சந்தியா எக்னலிகொட ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவே பொதுமன்னிப்பை இரத்துச் செய்ய வழியமைத்தது என மிகைப்படுத்தி பொய்யான தகவல்களுடனான ஊடக அறிக்கை ஒன்றை நேற்று (19.10.2026) முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ளார்.
இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள சில தகவல்கள் தேரர்களால் நடத்தப்படும் போராட்டத்துக்கு வலு சேர்ப்பதாகவும் பொது மக்கள் இது தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு அரசியல் அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர். குறித்த அறிக்கையில் உள்ள பொய்களும் பாரதூரமான தகவல்கள் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது..
தொழில்நுட்பக் கோளாறா? அரசியலமைப்பு மீறலா
பொது மன்னிப்பு தொடர்பில் இரு மனுக்கல் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.ஒன்று மாற்று கொள்கைகளுக்கான மையம் (CPA) சார்பில் பாக்கியசோதி சரவணமுத்து மற்றும் சந்தியா எக்னலிகொட ஆகியோரே தாக்கல் செய்துள்ளனர்.
மைத்திரிபால இருவரும் இணைந்து தாக்கல் செய்ததாக பொய் கூறியுள்ளார். பொதுமன்னிப்பு இரத்துச் செய்யப்பட்டமைக்கு ஜனாதிபதி செயலகத்தின் "தொழில்நுட்பக் கோளாறே" (Technical error) காரணம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், உயர்நீதிமன்றத் தீர்ப்பின் உண்மையான கருத்துக்களை ஆராயும்போது, இந்த அறிக்கை முற்றிலும் உண்மையைத் திரித்து, மக்களை திசைதிருப்பும் வகையில் அமைந்துள்ளமை புலனாகிறது.
உயர்நீதிமன்றத் தீர்ப்பின்படி, எந்தவொரு தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவும் இந்தப் பொதுமன்னிப்பு இரத்து செய்யப்படவில்லை.
ஜனாதிபதி வழங்கிய பொதுமன்னிப்பானது "தன்னிச்சையானது, பொது நம்பிக்கை மற்றும் இயற்கை நீதியின் விதிகளை மீறுவதாகும், மேலும் அவரது அதிகார வரம்பை மீறிய செயலாகும் (ultra vires)" என்று தீர்ப்பில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது வெறும் அலுவலகக் கவயீனமோ தவறோ அல்ல, மாறாக நிறைவேற்று அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து மேற்கொள்ளப்பட்ட தீவிர அரசியலமைப்பு மீறல் எனத் தீர்ப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
குழப்பமான வழக்கு எண்கள்
அறிக்கையின்படி, B 7417/10 என்பது நீதிமன்றத்திற்கு இடையூறு விளைவித்த வழக்கு என சிறிசேன தெரிவித்துள்ளார். இது முற்றிலும் தவறானது.
உயர்நீதிமன்றத் தீர்ப்பு தெளிவுபடுத்துவது போல், B 7417/10 என்பது பிரகீத் எக்னலிகொட வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட வழக்காகும்.
தேரருக்கு தண்டனை விதிக்கப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட CA (CC) Application No. 04/2016 ஆகும் (இது ஹோமாகம MC 40042 அறிக்கையின் அடிப்படையில் அமைந்தது).
ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கிய அடிப்படை வழக்கு எது என்பது குறித்துக் கூட முன்னாள் ஜனாதிபதியிடம் இன்றுவரை சரியான புரிதல் இல்லை என்பதை இது தெளிவாக உறுதிப்படுத்துகிறது.
நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சுக்கு அனுப்பி அனுமதி பெறப்பட வேண்டும் எனத் தான் உத்தரவிட்ட போதிலும், சட்டப் பிரிவுக்குப் பொறுப்பான மேலதிக செயலாளர் அந்த அனுமதியின்றி தன்னை தவறாக வழிநடத்தி கையொப்பத்தைப் பெற்றுக் கொண்டதாக சிறிசேன தனது அறிக்கையில் குற்றம் சுமத்துகிறார்.
அதிகாரிகள் மீது சுமத்தப்படும் குற்றம்
எனினும், வழக்குத் தீர்ப்பில் முழுமையாக மேற்கோள் காட்டப்பட்டுள்ள 2019 மே 21 ஆம் திகதியிட்ட மேலதிக செயலாளரின் உத்தியோகபூர்வ குறிப்பில் (Minute), " ஜனாதிபதியின் ஒப்புதலின் பேரில் இந்தச் கைதிக்கு முழுமையான ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவதற்காக உரிய உத்தரவை நீதி மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சுக்கு அனுப்பி வைப்பது உசிதமானது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது, அமைச்சுக்கு உத்தரவை அனுப்புவதற்கு முன்னதாகவே ஜனாதிபதியின் ஒப்புதல் கோரப்பட்டுள்ளது. அங்கு சிறிசேன, பொதுமன்னிப்பு வழங்குவது தொடர்பில் எவ்வித காரணத்தையும் பதிவு செய்யாமல் வெறும் "அனுமதிக்கின்றேன்" என கையொப்பமிட்டுள்ளார் என்பதை நீதிமன்றம் சுட்டிக்காட்டுகிறது.

2016 ஜனவரி 25 அன்று ஹோமாகம நீதிமன்றத்தில் வைத்து சந்தியா எக்னலிகொடவுக்கும், வழக்கை நடாத்திய சிரேஷ்ட அரச சட்டத்தரணி திலீப பீரிஸுக்கும் அச்சுறுத்தல் விடுத்தமை மற்றும் அவமதித்தமை தொடர்பில் 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கியமை முற்றிலும் ஒரு தன்னிச்சையான செயல் என உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
தான் செய்த பாரிய அரசியலமைப்புத் தவறை "தொழில்நுட்பக் கோளாறு" எனக் கூறி அதிகாரிகள் மீது பழியைப் போட முன்னாள் ஜனாதிபதி மேற்கொள்ளும் முயற்சியானது, உயர்நீதிமன்றத் தீர்ப்பின் உண்மையான தகவல்களுக்கு முன்னால் முற்றிலும் பொய்யானது என நிரூபணமாகியுள்ளது.