200 வருடம் ஆகியும் தோட்ட வைத்தியசாலைகளை மாற்ற முடியவில்லை: மயில்வாகனம் திலகராஜ்
200 வருடம் ஆகியும் கூட தோட்டங்களில் காணப்படும் வைத்தியசாலைகளை மக்கள் பிரதிநிதிகளுக்கு அரச வைத்தியசாலைகளாக மாற்ற முடியவில்லை அதற்கான தேவையும் அரசாங்கத்திடமில்லை என ஜனாதிபதி வேட்பாளர் மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்துள்ளார்.
ஹட்டனில் நேற்று(24)நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மலையக மக்களின் சவால்கள்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"பெருந்தோட்ட சுகாதாரம் இது வரை தேசிய சுகாதாரத்தினுள் உள்வாங்கப்படாமல் இருப்பது மலையக மக்கள் முகம் கொடுக்கும் பாரிய சவாலாகும்.
சுமார் 550 வைத்திய நிலையங்களை வைத்திய நிலையங்கள் என்று சொல்லலாமா என்று கூட தெரியாது.
மலையக பெருந்தோட்டங்கள் தோறும் இருக்கின்றன. 100 இற்கும் குறைவான அளவு தோட்ட வைத்திய உத்தியோகஸ்த்தர்கள் தான் இருக்கின்றனர்.
இதனை மாற்றியமைப்பதாக காலத்திற்கு காலம் ஆட்சிக்கு வந்தவர்கள் 2006 ஆண்டும் அப்போது சுகாதார அமைச்சராக இருந்து நிமல் சிறிபால டி சில்வா அவர்கள் பெருந்தோட்ட வைத்தியசாலைகளை அரசாங்கம் ஏற்பதற்காக அமைச்சரவை பத்திரம் ஒன்றினை தயாரித்தார்.
அதில் வெறும் 50 மாத்திரம் பொறுப்பேற்று அதில் 20 மாத்திரம் தான் இப்போது நடைமுறையில் இருக்கின்றது.
ஆனால், இன்னும் 525 அவ்வாறேதான் உள்ளது. இதன் பின் நல்லாட்சி காலத்தில் ராஜித சேனாரத்ன சுகாதார அமைச்சராக இருக்கும் போது அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது ஆனால் ஆட்சி மாற்றத்துடன் கைவிடப்பட்டது.
இருந்த போதிலும் நாடாளுமன்றத்தில் நான் இருந்த போது சுகாதாரம் வீடமைப்பு குழுவில் நான் தலைவராக இருந்த போது பெருந்தோட்ட சுகாதாரம் தொடர்பாக 2020 ஆண்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தேன் அதற்கு பின்னர் நாடாளுமன்றம் சென்றவர்கள் அந்த அறிக்கையில் எந்தளவு பயனை பெற்றார்கள் என தெரியவில்லை.
எனினும் இன்றும் பெருந்தோட்ட சுகாதார துறை தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் கீழ் வைக்கப்பட்டுள்ளது என்ற தகவலினை தேசிய கொள்கை வகுப்பாளர்களுக்கு சொல்ல வேண்டியிருக்கிறது." என அவர் குறிப்பிட்டுள்ளார்.