உடன்பிறப்புக்களை சமாதானப்படுத்துவதில் தோற்றுப்போன மஹிந்த ராஜபக்ச!
சகோதரர்களான கோட்டாபய மற்றும் பசில் ஆகியோரின் முடிவை மாற்றியமைக்க பிரதமர் ராஜபக்ச மேற்கொண்ட முயற்சி பயன் தரவில்லை.
பல மாதங்களாக முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரின் தலைமையிலான அதிருப்திக் குழுவின் முக்கிய இலக்காக இருந்த அவரது இளைய சகோதரரும் நிதியமைச்சருமான பசில் ராஜபக்ஷவின் முறைப்பாட்டையடுத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அவர்கள் இருவரையும் அமைச்சு பதவியில் இருந்து வெளியேற்றினார்.
இந்த முடிவில் கோட்டாபயவும் பசில் ராஜபக்சவும் உறுதியாக இருந்தனர்.
இதன்போது ராஜபக்ச குடும்பத்தில் அனுபவம் வாய்ந்த அரசியல்வாதியான மஹிந்த ராஜபக்ச, தமது உடன்பிறப்புக்கள் இருவரும், தமது தீர்மானத்தை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று கோரியபோதும் அது பயனளிக்கவில்லை என்று ஆங்கில இதழ் ஒன்றின் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை அரசாங்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்த இரண்டு அதிருப்தியாளர்களுடன் சுமார் 30 நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்கத்தில் இருந்து வெளியேற இருப்பதாக ஊடகங்கள் உள்ளபோதும் இன்னும் அது உறுதியாகவில்லை.
இந்தநிலையில் அரசாங்கத்தில் தமது நிலைப்பாடு தொடர்பாக எதிர்வரும் செவ்வாய்க்கிழமையன்று முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்திக்கவுள்ளது.
இதன்பின்னரே அந்தக்கட்சியின் முடிவு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.