தனது பதவி விலகல் தொடர்பில் அமெரிக்காவுக்கான முன்னாள் தூதுவர் மகிந்த சமரசிங்க வெளியிட்ட பதிவு
பதவி விலகுமாறு அரசாங்கம் ஒருபோதும் குறிப்பிடவில்லை. தனிப்பட்ட காரணிகளுக்காக பதவி விலகியுள்ளேன் என அமெரிக்காவுக்கான முன்னாள் தூதுவர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
தனது பதவி விலகல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பதவி விலகிய மகிந்த சமரசிங்க
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், கடந்த மாதம் 31 ஆம் திகதி தூதுவர் பதவியில் இருந்து விலகி, நாட்டுக்கு வந்துள்ளேன். பதவி விலகுமாறு அரசாங்கத்திடமிருந்து எந்தவொரு அழுத்தமும் வரவில்லை.
சுமார் ஐந்து ஆண்டுகள் பணியாற்றிய பின்னர் தனிப்பட்ட காரணங்களினாலேயே பதவி விலகினேன். ஐந்து ஆண்டுகாலத்தில் மூன்று ஜனாதிபதிகளின் கீழ் சேவையாற்றியுள்ளேன்.

சிறந்த முறையில் செயற்படுவதால் எவரும் என்னுடன் முரண்படவில்லை. பதவிக்காலத்தில் இலங்கை-அமெரிக்க உறவுகளை வலுப்படுத்தவும், சர்வதேச நாணய நிதியத்துடனான இலங்கையின் ஒப்பந்தங்களுக்கு அமெரிக்காவின் ஆதரவைப் பெறவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டேன்.
மேலும் அமெரிக்காவால் விதிக்கப்படும் வரிகளை 10 சதவீதமாக கட்டுப்படுத்தவும் அமெரிக்காவிடமிருந்து ஒரு கடற்படைக் கப்பல் மற்றும் பல ஹெலிகொப்டர்களைப் பெற்றுக்கொடுக்கவும் பெரிதும் துணை புரிந்தேன்.
27 வருடங்களாக நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றியுள்ளேன். அரசியலில் முக்கிய பதவிகளை வகித்துள்ளேன். இனி அரசியலில் ஈடுபடும் நோக்கம் கிடையாது. இருப்பினும், சர்வதேச விவகாரங்களில் ஆதரவளிக்குமாறு கோரப்பட்டால் அரசாங்கத்திற்கு உதவத் தயாராகவுள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.