அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த திரையில் வரும் மகிந்த
இலங்கையில் மக்கள் மத்தியில் ராஜபக்சர்களுக்கு ஏற்பட்டுள்ள சரிவை சரி செய்யும் வகையில், அடுத்த ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து மகிந்த தரப்பினால் அடுத்தகட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அதற்கமைய இலங்கை அரசியல் வரலாற்றில் முக்கியமானதொரு காலகட்டத்தை குறிக்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசியல் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை மையமாகக் கொண்டு பிரம்மாண்ட திரைப்படமொன்று தயாராகி வருகின்றது.
வெகுவிரைவில் இதன் படப்பிடிப்புப் பணிகள் ஆரம்பமாகவுள்ளது. இலங்கைத் திரைப்படத் துறையில் இதுவொரு புதிய திருப்பமாக அமையும் என கலை உலகத்தால் எதிர்பார்க்கப்படுகின்றது.
மகிந்தவின் சுயசரிதை
மெதமுலன கிராமிய அரசியல் முதல் நிறைவேற்று ஜனாதிபதி பதவி வரையிலான பயணப்பாதை, தமிழினத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போர் மற்றும் சர்வதேச ரீதியாகவும் உள்நாட்டிலும் எதிர்கொண்ட பல்வேறு சவால்கள் இந்த திரைப்படத்தின் ஊடாக மீண்டும் மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கப்படவுள்ளன.

இலங்கையின் அரசியல் தலைவரொருவரின் முழுமையான வாழ்க்கைப்பயணம் திரைக்கு வரும் அரிதான சந்தர்ப்பமாக இது கருதப்படுகிறது.
உள்நாட்டு விளம்பரத் துறையில் தனக்கெனத் தனிமுத்திரை பதித்த மூத்த படைப்பாளி ஒருவரே இத்திரைப்படத்தை இயக்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கதாநாயகன் யார்
அதிநவீன சினிமா தொழில்நுட்பம் மற்றும் பாரிய நிதி முதலீட்டுடன் மகிந்தவின் சுயசரிதை படைப்பு உருவாகுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், உள்நாட்டுப் பார்வையாளர்களை மட்டுமன்றி, சர்வதேச திரைப்பட விழாக்கள் மற்றும் சந்தையையும் இலக்கு வைத்து திட்டமிடப்பட்டுள்ளது.
எனினும் மகிந்த ராஜபக்ச எனும் பலம்மிக்க கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பது யார் என்பதே தற்போதைய பிரதான ஆச்சரியமாக உள்ளதென குறிப்பிடப்படுகின்றது. கதாபாத்திரத் தேர்வு மிகவும் இரகசியமாக இடம்பெற்று வருகின்றது.
முதன்மை மற்றும் துணை முதன்மை பாத்திரங்களுக்காக நாட்டின் மூத்த மற்றும் புதிய நடிகர்கள் சிலர் குறித்துக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.