மகிந்தவின் அருமை தற்போது புரிகின்றது: ரோஹித எம்.பி.வலியுறுத்து!
தேசிய மக்கள் சக்தியின் செயற்பாடுகளால் மகிந்த ராஜபக்சவுக்கான மதிப்பு அதிகரித்துள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
களுத்துறை பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்"அன்றும், இன்றும், என்றும் எனது அரசியல் தலைவர் மகிந்த ராஜபக்சதான்.
அரசின் செயற்பாடு
சிலிண்டரில் நான் வாக்குக் கேட்ட வேளையிலும் இதனைப் பகிரங்கமாகக் குறிப்பிட்டிருந்தேன். மகிந்த ராஜபக்ச போன்றதொரு அரசியல் தலைவர் மீள உருவாகப்போவதில்லை.
தற்போதைய அரசின் செயற்பாடுகளால் மகிந்தவுக்குரிய பெறுமதி அதிகரித்துள்ளது. எமது ஆட்சி இருந்திருந்தால் மகிந்தவைக் கிழட்டு மைனா எனவும், நாமலைக் குட்டி மைனா எனவும் தேசிய மக்கள் சக்தியினர் விமர்சித்திருப்பார்கள்.
அன்று எம்மை இப்படி விமர்சித்தவர்களுக்கு மக்கள் இன்று சமூக வலைத்தளங்களில் சிறப்பான பதிவுகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
தேசிய மக்கள் சக்தியினருக்கு ஆட்சியை வழங்கியது நல்லது. இப்போது யதார்த்தம் புரிந்திருக்கும். தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வருவதற்கு எமது கட்சி ஆதரவாளர்களே காரணம். அவர்களும் உண்மையைப் புரிந்துகொண்டுள்ளனர். மகிந்த ராஜபக்சவை விரைவில் களுத்துறைக்கு அழைத்து வருவேன்." என தெரிவித்துள்ளார்.