மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு பெரும் ஆபத்தில்...! அரசாங்கத்திடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு பெரும் ஆபத்தில் இருப்பதாகவும், அவருக்கு ஏதேனும் தீங்கு நேர்ந்தால் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்றும் மகிந்த ராஜபக்சவின் ஊடகப்பேச்சாளரும், சட்டத்தரணியுமான மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டபோது, உடல் பரிசோதனை கூட செய்யப்படாத ஒரு பெரிய குழுவினர் அவரை சுற்றி இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதிக்கான பாதுகாப்புப்படையினர் குறைப்பு
இத்தகைய பாதுகாப்பற்ற சூழலில் தான் மகிந்த ராஜபக்ச இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டார் என்றும் கூறியுள்ளார்.

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு தனது போர் வீரர்கள் என்று அழைக்கப்படுபவர்களை நினைவுகூரும் இத்தகைய நேரத்தில், சில குழுக்கள் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த முயற்சிக்கக்கூடும் என்பதால் அரசாங்கம் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் முன்னாள் ஜனாதிபதிக்கான பாதுகாப்புப் படையினரின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டதாக அவர் நினைவுபடுத்தியுள்ளார்.
சந்தேகத்திற்கிடமான மரணங்கள் நிகழ்ந்ததன் காரணமாக, தனது சொந்த பாதுகாப்பு குறித்து ஓர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் கமகே மேலும் தெரிவித்துள்ளார்.