“நடுத்தெருவில் நாயை போல் இறந்து போனார்” அன்று மகிந்த கூறியது! இன்று அத்தனை ஆட்டங்களும் தோல்வி
அரசியல் மண்ணில் சஜித்தை தனிமைப்படுத்த மகிந்த ஆடிய அனைத்து விளையாட்டுக்களும் தோல்வியடைந்துள்ளன என்பது சஜித் அண்மையில் மகிந்த மற்றும் கோட்டாபயவுக்கு எதிராக கொழும்பில் காட்டிய விளையாட்டின் மூலம் காணக் கூடியதாக இருந்தது.
"ஆறுமுகங்கள் - பன்னிரு கைகள் மயில் வாகனத்தில்
உருகுணை நாட்டில் இருக்கும் கந்த கதிர தேவனே
மறைக்க முடியாது எம் பிள்ளைகளை தூக்கி சென்ற காரணத்தை
தேவ சக்தியில் தவிடுபொடியாக்கு பிரேமதாசவின் ஆட்சியை"
இது கடந்த 1992 ஆம் ஆண்டு ரணசிங்க பிரேமதாசவுக்கு எதிராக மகிந்த ராஜபக்ச, கதிர்காமத்திற்கு பாத யாத்திரை சென்ற போது பாடப்பட்ட கவிதை. இந்த பாத யாத்திரையை குரோத யாத்திரை என அன்று பிரேமதாச கூறியிருந்தார்.
பிரேமதாசவை தவிடுபொடியாக்குவதற்காக தேங்காய் உடைக்கும் நோக்கில் இந்த பாத யாத்திரை நடத்தப்பட்டது. “ நாங்கள் பாத யாத்திரை சென்று தேங்காய் உடைத்து ஒரு வருடங்கள் கழியவில்லை. பிரேமதாச நடுத்தெருவில் நாயை போல் இறந்து போனார்.” பாத யாத்திரை நடத்தப்பட்ட ஒரு வருடம் பூர்த்தியாகி நிலையில், எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் மகிந்த ராஜபக்ச இவ்வாறு நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார்.
அதே மகிந்த ராஜபக்ச 2005 ஆம் ஆண்டு நாட்டின் ஜனாதிபதியானார். 2005 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை நாட்டை 9 ஆண்டுகள் ஆட்சி செய்தார். எனினும் அன்றைய எதிர்க்கட்சியான ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி, மகிந்தவுக்கு எதிராக கொழும்பில் மக்களை ஒன்றுக்கூட்டும் பாத யாத்திரையையோ பேரணியையோ நடத்தவில்லை என்பதால், மகிந்த ஜனாதிபதியாக பதவி வகிக்கும் போது, அவருக்கு எதிராக மக்கள் எதிர்ப்பை கண்டிருக்கவில்லை.
எனினும் ரணில் விக்ரமசிங்கவின் எதிர்க்கட்சி 2000, 2001 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளில் சந்திரிகாவின் அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பை நோக்கி மக்களை திரட்டும் பேரணியை நடத்தியது.
சந்திரிகா ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைத்தமைக்கு எதிராக இறுதியான பேரணி 2005 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச வெற்றி பெற்ற பின்னர், ரணில் விக்ரமசிங்கவின் எதிர்க்கட்சி, மகிந்தவுக்கு எதிராக பேரணிகளை நடத்தவில்லை. 2012 ஆம் ஆண்டு கொழும்பு கோட்டை ஆர்ப்பாட்டம் ஒன்று மட்டும் நடத்தப்பட்டது.
இந்த நிலையில், பிரேமதாசவின் அரசாங்கத்திற்கு எதிராக பாத யாத்திரை சென்ற மகிந்த, அவரது சகோதரர் கோட்டாபய மற்றும் அவர்களின் குடும்பத்தினர் எதிர்நோக்கிய மிகப் பெரிய மக்கள் எதிர்ப்பு பேரணியை சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தி நடத்தியது. “ சாபம் இனி போதும்” என்ற பெயரில் இந்த மாபெரும் பேரணி நடத்தப்பட்டது.
பிரேமதாசவுக்கு எதிராக தேங்காய் உடைக்க சென்ற தனக்கு எதிராக பிரேமதாசவின் புதல்வர் கொழும்புக்கு பொதுமக்களை திரட்டிக்கொண்டு வருவார் என மகிந்த எப்போதாவது எண்ணிப்பார்த்திருப்பாரா? உண்மையில் இல்லை.
ரணசிங்க பிரேமதாசவுக்கு எதிராக மகிந்த ராஜபக்ச பாத யாத்திரை மாத்திரம் செல்லவில்லை. “ஜன கோஷம்” போன்ற பல்வேறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தினார். இவ்வாறு பிரேமதாசவுக்கு எதிராக பாத யாத்திரை மற்றும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்திய மகிந்த தரப்பினர், பிரேமதாச கொலை செய்யப்பட்ட பின்னர், 1994 ஆம் ஆண்டு பிரேமதாசவை கொலை செய்த “பாபு புத்தனாக்கட்டும்” என்ற கோஷத்தை எழுப்பியவாறு மே தின பேரணியில் சென்றனர்.
ரணசிங்க பிரேமதாசவின் கொலைக்கு பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் கவிழ்ந்தது. மகிந்த தரப்பினர் சந்திரிகாவின் தலைமையில் அரசாங்கம் ஒன்றை அமைத்தனர். மகிந்த தொழிலமைச்சராக பதவிப் பிரமாணம் செய்தார்.
மகிந்த மற்றும் ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் கோட்டை ஹம்பாந்தோட்டை மாவட்டம். ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் பெலியத்தை தொகுதியில் இருந்து மகிந்த ராஜபக்ச 1970 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்திற்கு தெரிவானார். 76 ஆம் ஆண்டு தோல்வியடைந்தார். அன்றில் இருந்து பிரேமதாச கொல்லப்படும் வரை முல்கிரியாகல இடைத்தேர்தலை தவிர மகிந்த தரப்பினருக்கு ஹம்பாந்தோட்டையில் ஒரு தேர்தலில் கூட வெற்றி பெற முடியவில்லை.
ராஜபக்சவினரின் கோட்டை என்று பிரபலமாக இருந்த ஹம்பாந்தோட்டையை ஜே.ஆர் மற்றும் பிரேமதாச ஆகியோர் ஐக்கிய தேசியக் கட்சியின் கோட்டையாக மாற்றினர். மீண்டும் பிரேமதாசவினர் உருவாக மாட்டார்கள் என்று எண்ணி மகிந்த 1994 ஆம் ஆண்டு மீண்டும் ஹம்பாந்தோட்டை ராஜபக்சவினரின் கோட்டையாக மாற்றினார்.
1994 ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி, தனது தந்தையின் தொகுதியான மத்திய கொழும்பு தொகுதியை சஜித் பிரேமதாசவுக்கு வழங்க மறுத்தது. தனது தந்தைக்கு எதிராக தேங்காய் உடைத்த தலைவரின் கோட்டைக்குள் கால் பதிக்கவே சஜித் பிரேமதாச ஹம்பாந்தோட்டைக்கு செல்ல தீர்மானித்தார்.
சஜித் பிரேமதாசவின் ஹம்பாந்தோட்டை வருகை, மகிந்தவுக்கு மனகசப்பை ஏற்படுத்தியது. ரணில் கட்சிக்குள் சஜித்தை ஓரங்கட்டி வருது பற்றி அறிந்த மகிந்த, ரணில் ஊடாக சஜித்தின் ஒருங்கிணைப்பு கட்டமைப்பை பலவீனப்படுத்தினார். சஜித் மீது தாக்குதல் தொடுக்க ரணில், மகிந்த மற்றும் மேர்வின் சில்வாவை பயன்படுத்தினார். எனினும் சஜித் பிரேமதாச, ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில், 2000 ஆம் பொதுத் தேர்தல்,2001 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் மற்றும் 2002 ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஆகியவற்றில் மிகப் பெரிய வெற்றிகளை பெற்றார்.
மகிந்த ராஜபக்ச எதிர்க்கட்சித் தலைவராகவும் உத்தியோகபூர்வமற்ற பிரதமராகவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் அமைப்பு தலைவராகவும் போட்டியிட்ட 2004 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலிலேயே சஜித் தோற்றார். அன்று முதல் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி தெரிவாகி நடத்தப்பட்ட அனைத்து தேர்தல்களிலும் மகிந்த தரப்பினர் வெற்றி பெற்றனர்.
ரணசிங்க பிரேமதாசவை போல் அவரது புதல்வர் சஜித் பிரேமதாசவும் ஹம்பாந்தோட்டை என்ற கோட்டையை தமது குடும்பத்தினருக்கு இல்லாமல் செய்து விடுவார் என்பது மகிந்தவுக்கு தெரியும். இதன் காரணமாக சஜித் மீது மகிந்தவுக்கு அச்சம் இருக்கின்றது. அவர் ரணிலை பயன்படுத்தி, சஜித் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக வருவதை தடுத்துக்கொண்டார்.
சஜித் ஐக்கிய மக்கள் சக்தியை ஆரம்பித்து ஐக்கிய தேசியக் கட்சியின் பலத்தை கைப்பற்றி எதிர்க்கட்சித் தலைவரான பின்னரும், சஜித் தலைமையிலான கட்சியை உடைப்பதற்காக ரணிலை பலவந்தப்படுத்தி நாடாளுமன்றத்திற்கு வரவழைத்துக்கொண்டுள்ளார். எனினும் அரசியல் மண்ணில் சஜித்தை தனிமைப்படுத்த மகிந்த ஆடிய அனைத்து விளையாட்டுக்களும் தோல்வியடைந்துள்ளன என்பது சஜித் அண்மையில் மகிந்த மற்றும் கோட்டாபயவுக்கு எதிராக கொழும்பில் காட்டிய விளையாட்டின் மூலம் காணக் கூடியதாக இருந்தது.
மகிந்த ராஜபக்ச, தனக்கு எதிராக பாத யாத்திரை செல்லும் போது, ஜன கோஷம் ஆர்ப்பாட்டங்களை நடத்தும் போது, ரணசிங்க பிரேமதாச, பொலிஸாரை பயன்படுத்தி அவற்றை அடக்கவுமில்லை, தடையேற்படுத்தவுமில்லை.
எனினும் கோட்டாபய மற்றும் மகிந்தவின் அரசாங்கம், சஜித் கொழும்புக்கு மக்களை திரட்டி வரப் போகிறார் என்று அறிந்ததும் ஐக்கிய தேசியக்கட்சிக்கு கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்த முதலில் இடம் கொடுத்தது. சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கொழும்புக்கு பொதுமக்களை திரட்டி வரப் போவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்ததும் ஐக்கிய தேசியக்கட்சி நித்திரையில் இருந்து எழுந்தது போல், கொழும்பு லிப்டன் சுற்று வட்டத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது.
சில பதாகைள் மற்றும் சிறிய கூட்டத்துடன் நடத்தப்பட்ட அந்த ஆர்ப்பாட்டத்திற்கு ராஜபக்சவினருக்கு கடைக்கு செல்லும் ஊடகங்களில் மிகப் பெரிய பிரசாரம் வழங்கப்பட்டது. இதன் பின்னர் அரசாங்கம் அவசரமாக சுகாதார வழிக்காட்டல் சட்டத்திட்டங்களை அறிவித்து, கூட்டங்களுக்கு தடைவிதித்தது. சுகாதார வழிக்காட்டல்களை மீறி, கூட்டங்களுக்கு வருவோருக்கு எதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்த போவதாக பொலிஸ் மா அதிபர் தனியாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தார்.
கொழும்புக்கு வந்தால், சிறந்த பாடம் கற்பிக்கப்படும் என பொலிஸ் துறைக்கு பொறுப்பான அமைச்சர் குறிப்பிட்டிருந்தார். எனினும் தாம் கட்டாயம் கொழும்புக்கு வரப் போவதாக சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தியினர் கூறினர். எதிர்ப்பு பேரணி செவ்வாய் கிழமை நடத்தப்படவிருந்தது. பொலிஸார் திங்கள் கிழமை மேல் மாகாணத்தில் உள்ள நீதிமன்றங்களுக்கு சென்று, ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டப் பேரணிக்கு தடை கோரினர்.
சில நீதிமன்றங்கள் உத்தரவுகளை வழங்கின. பல நீதிமன்றங்கள் தடைவிதிக்க மறுத்தன. ராஜபக்சவினருக்கு ஆதரவாக செயற்படும் ஊடகங்கள், நீதிமன்றம் பேரணிக்கு தடைவிதித்த செய்திகளை மாத்திரமே ஒலி, ஒளிப்பரப்பின. அதனையும் தாண்டி அந்த ஊடகங்கள், ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டப் பேரணி இரத்துச் செய்யப்பட்டதாக பிரசாரம் செய்தன. இந்த ஊடகங்கள் கொரோன பரவும் என்பதால், கொழும்பு வர வேண்டாம் என மருத்துவர்கள் மூலம் அறிக்கை வெளியிட்டதுடன் அதனை தமது ஊடகங்களில் பிரசாரப்படுத்தின.
கொரோனா பரப்புகின்றனர் எனக் கூறி கைது செய்யப்பட்டவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு கொண்டு சென்ற விதத்தை ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டத்திற்கு வருவோர் ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருந்த காலத்தில் நேரடியாகவே பார்த்துள்ளனர். எனினும் அவர்கள் அச்சமின்றி கொழும்புக்கு வர பேருந்துகளில் ஏறினர். ஆர்ப்பாட்டப் பேரணி நடைபெறும் நாளுக்கு முதல் நாள் இரவிலேயே வெளியிடங்களில் இருந்து கொழும்புக்கு வாகனங்களை சோதனையிட பொலிஸார் வீதி சோதனை சாவடிகளை ஏற்படுத்தியிருந்தனர்.
போருக்கு தயார்ப்படுத்தும் வகையில் பொலிஸார் நாடு முழுவதும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொள்ள பொதுமக்கள் வருவார்கள் என்பதை புலனாய்வுப் பிரிவினர் ஊடாக அறிந்துக்கொண்டதன் காரணமாகவே அரசாங்கம் ஆர்ப்பாட்டப் பேரணிக்கு பயந்தது என்பதை சின்னப்பிள்ளை கூட புரிந்துக்கொள்ளும்.
கொழும்புக்கு வரும் பேருந்துகளை சோதனை சாவடிகளில் நிறுத்தி, அதில் வருவோரின் அடையாள அட்டை இலக்கங்களை பதிவு செய்துகொண்ட பின்னர் திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளை நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டன. எனினும் இந்த சம்பவங்களை தம்மை சுயாதீனம் என்றும் தேசியம் என்றும் கூறிக்கொள்ளும் எந்த ஊடகங்களும் செய்திகளாக வெளியிடவில்லை.
நீதிமன்றம் மற்றும் பொலிஸாரை பயன்படுத்தி ஐக்கிய மக்கள் சக்தியினரை அச்சுறுத்தலாம் என்று அரசாங்கம் எண்ணியது. அச்சமின்றி அந்த கட்சியினர் மக்களை அழைத்து வந்தால், அவை ஊடகங்களில் வராமல் தடுப்பது என்பது அரசாங்கத்தின் இரண்டாவது வழிமுறையாக இருந்தது. அரசாங்கம் மற்றும் ராஜபக்சவினருக்கு கடைக்கு போகாத இரண்டு, மூன்று ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் காரணமாக இந்த இரண்டு வழிமுறைகளும் தோல்வியடைந்தன.
கொழும்புக்கு வரும் பேருந்துகள் திருப்பி அனுப்பப்படும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியானதை அடுத்து ராஜபக்சவினருக்கு கடைக்கு போகும் ஊடகங்களின் இருக்கைகள் சூடாகின. ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டப் பேரணி எப்படியாவது நிறுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பேரணி மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படவுள்ளது தகவல் சஜித் பிரேமதாசவின் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு வழங்கப்படடது.
சுயாதீனம் எனக் கூறிக்கொள்ளும் ராஜபக்சவினருக்கு கடைக்கு போகும் ஊடகங்கள் இந்த தகவலுக்கு முக்கியத்துவதை கொடுத்து மிகப் பெரிய பிரசாரத்தை முன்னெடுத்தன. எனினும் மிகப் பெரிய மக்கள் கூட்டம் கொழும்புக்கு வந்தது. கொரோனா அச்சம், நீதிமன்ற உத்தரவு, பொலிஸாரின் அச்சுறுத்தல், குண்டு தாக்குதல் அச்சம், ஊடகங்களின் பொய்ப் பிரசாரம் ஆகியவற்றுக்கு மத்தியில் வந்த இந்த மக்கள் கூட்டம் “ கோட்டாபய மூடினார் நாங்கள் வந்து விட்டோம்.. ஏன் சஜித்தை கண்டு அஞ்சுகிறீர்கள்.. ” என்ற கோஷங்களை எழுப்பினர்.
ராஜபக்சவினர் யாரை கண்டு அஞ்சுகின்றனர் என்பது பேரணியில் கலந்துகொண்ட மக்களின் வாய்கள் மூலம் வெளியில் வந்த கோஷங்கள் மூலம் தெளிவாகியது. இதுவரை காலமும் அரசாங்கத்திற்கு கடைக்கு சென்று வாய்களை மூடிக்கொண்டிருந்த விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில போன்றோரும் ஆர்ப்பாட்டப் பேரணி எண்ணி குழப்படைந்தனர்.
நீதிமன்றம், பொலிஸ், ஊடகங்களை கொண்டு தடுக்க முயற்சித்த இந்த ஆர்ப்பாட்டப் பேரணி மக்கள் சுனாமியாக மாறுவதை மிக அருகில் என அறிந்தே அவர்கள் குழப்படைடைந்தனர். மகிந்த ராஜபக்சவினர் ரணசிங்க பிரேமதாசவுக்கு கொடுத்த தொந்தரவுகளை ராஜபக்சவினர், பிரேமதாசவின் புதல்வர் மூலம் அனுபவிக்க நேர்ந்தமை ஆச்சரியமானது.
கட்டுரையாளர் - உபுல் ஜோசப் பெர்னாண்டோ
மொழியாக்கம் - ஸ்டீபன்