விசாரணைக்கு செல்ல தயாராகும் மகிந்த! கபில சந்திரசேனவின் மரணத்தின் பின்னர் வெளியான அறிவிப்பு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, இலஞ்சம் - ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாவதற்கு விடுக்கப்பட்ட அழைப்பாணை ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், உரிய நேரத்திற்கு முன்னிலையாவதற்கு தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் மறைந்த முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி கபில சந்திரசேனவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியபோதே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இது தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அழைப்பை ஏற்ற மகிந்த ராஜபக்ச
ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக, இலஞ்சக் குற்றச்சாட்டு ஆணைக்குழுவின் முன் 12ஆம் தேதி முன்னிலையாகுமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த 2013 ஆம் ஆண்டில், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் 6 ஏர்பஸ் ஏ-330 ரக விமானங்களையும், 8 ஏ-350 ரக விமானங்களையும் வாங்கியபோது, அப்போதைய தலைமைச் செயல் அதிகாரி கபில சந்திரசேனவும், அவரது மனைவி நியோமாலி விஜேநாயக்கவும் 2 மில்லியன் அமெரிக்க டாலர் இலஞ்சம் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டனர்.
விசாரணையின் போது, இந்தப் பரிவர்த்தனையில் தான் பெற்ற 2 மில்லியன் டொலரில், 20 மில்லியன் ரூபாயை அப்போதைய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜெயரத்ன மற்றும் 60 மில்லியன் ரூபாயை அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆகிய இருவருக்கும் வழங்கியதாக கபில சந்திரசேன கூறியதாக இலஞ்ச ஆணைக்குழு அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், ஜனாதிபதி சட்ட ஆலோசகர் ரீன்சி அர்சகுலரத்ன இதற்கு ஆட்சேபனை தெரிவித்து, இலஞ்ச ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தனது கட்சிக்காரரை மிரட்டி அவரிடமிருந்து வாக்குமூலங்களைப் பெற்றதாகக் கூறி நீதிமன்றத்தில் ஒரு பிரமாணப் பத்திரத்தைச் சமர்ப்பித்துள்ளார்.
YOU MAY LIKE THIS VIDEO