மகிந்த அனுப்பிய உருக்கமான கடிதத்திற்கு நாமலின் பதில் பதிவு..
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு, அவரது தந்தையும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ச ஆலோசனைகளும் அறிவுரைகளும் அடங்கிய உருக்கமான கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக ஊடாக இந்தக் கடிதம் நாமல் ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
நாமலுக்கு வழங்கிய அறிவுரை
குறித்த கடிதத்தில், அரசியலில் ஈடுபடுவதற்கு முன்னர் நாமலுக்கு வழங்கிய அறிவுரைகளை நினைவுபடுத்தியுள்ள மகிந்த ராஜபக்சஅரசியலுக்கு வருபவர்கள் சிறை செல்லவும் துயரங்களை அனுபவிக்கவும் தயாராக இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தனது அரசியல் வாழ்க்கையின் ஆரம்பத்திலும் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டதாகக் கூறியுள்ள அவர், அக்காலத்தில் நீதிமன்றத்தின் மீதே தனக்கு நம்பிக்கை இருந்ததாகவும், நாமலும் எவர் என்ன கூறினாலும் நீதிமன்றத்தின் மீது மட்டுமே நம்பிக்கை வைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், நாமலுக்கு எதிர்காலத்தில் அதிகாரம் கிடைத்தாலும், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் எனவும் மகிந்த ராஜபக்சவலியுறுத்தியுள்ளார்.
“பெற்றோர்கள் செய்யும் செயல்களுக்காகப் பிள்ளைகள் பலியாகக்கூடாது” என்ற தனது நிலைப்பாட்டைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், பழிவாங்காதிருப்பதே ராஜபக்ச குடும்பத்தின் வழிமுறையும் பாரம்பரியமுமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாமலின் பதில்
அத்துடன், தனது மகன்கள் யோஷித மற்றும் ரோஹித ஆகியோர் தம்மையும் நாமல் ராஜபக்சவின் தாயாரையும் சந்தித்து நலம் விசாரித்து வருவதாகவும் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், தனது தந்தை கடிதத்தில் குறிப்பிட்டுள்ள வார்த்தைகள் இன்று தனக்கு ஆழமான அர்த்தத்தைத் தருவதாக நாமல் ராஜபக்சதெரிவித்துள்ளார்.
எந்தவொரு கடினமான சூழ்நிலையையும் துணிச்சலுடன் எதிர்கொள்வதற்கும், நீதியின் மீது மனசாட்சியை அடிப்படையாகக் கொண்டு நம்பிக்கை வைப்பதற்கும், இக்கட்டான காலங்களிலும் தனது கொள்கைகளையும் அறநெறிகளையும் மாற்றமின்றிப் பேணுவதற்கும் கற்றுக்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
“எனவே, உறுதியாகவும் உண்மையின் மீது நம்பிக்கையுடனும் தொடர்ந்து முன்னோக்கிப் பயணிக்கிறேன்” என நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.
you may like this..