100 பில்லியன் கொடுத்தாலும் கப்பலாம் ஏற்பட்ட சூழல் பாதிப்பை மீட்டெடுக்க முடியாது
இலங்கை கடலில் தீப்பரவலுக்கு உள்ளான எம்.வி எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலுக்கு இழப்பீடாக 100 பில்லியன் செலுத்தப்பட்டாலும், சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட சேதத்தை மீட்டெடுக்க முடியாது என்று சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கப்பல் தீப்பரவலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து அரசாங்கம் அதிக பட்ச கவனம் செலுத்தியுள்ளதுடன், தீ விபத்துக்கான காரணம் குறித்தும், கப்பலை இலங்கை கடலுக்குள் நுழைய அனுமதித்தவர்கள் மீதும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
மேலும், அவர்களை, அவர்களின் தரத்தைப் பொருட்படுத்தாமல் தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றும் அவர் தெரிவித்தார்.
கப்பல் மூழ்கினால் எண்ணெய் கசிவைத் தடுப்பதில் அரசாங்கம் கவனத்தை செலுத்தியுள்ளது. அதேநேரம் எண்ணெய் கசிவு ஏற்பட்டால், அது பாரிய சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, கப்பல் தொடர்பான மேலதிக நடவடிக்கைகளுக்கு நிபுணர்களின் கருத்துக்கு ஏற்ப முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
அத்துடன் எண்ணெய் கசிவு ஏற்பட்டால், நிபுணர்களின் கருத்துப்படி அதைத் தவிர்க்க வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை கடலில் குறுகிய காலத்தில் பல கப்பல் தீப்பரவல் சம்பவங்கள் நடந்துள்ளன.எனவே, எதிர்காலத்தில் மேலும் கப்பல் விபத்துக்களைத் தடுக்க நாடு கொண்டிருக்கவேண்டிய வேண்டிய வசதிகள் மற்றும் உபகரணங்களைப் பெறுவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது என்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.