சுமந்திரன் மீது கொலை முயற்சி! நால்வருக்கு பயங்கரவாத சட்டத்தின் புதிய விதியின்கீழ் பிணை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்ய முயற்சித்ததாகக் கூறப்படும் நான்கு பேருக்கு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் புதிய விதிகளின் கீழ் கொழும்பு மேல் நீதிமன்றம் முதன்முறையாக பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரை கொலை செய்ய சதி செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் நான்கு சந்தேகநபர்களுக்கு எதிராக புதன்கிழமையன்று குற்றப்பத்திரிகைகள் சமர்ப்பிக்கப்பட்டது.
பிணையில் செல்ல அனுமதி

அதன்பின்னர், நான்கு சந்தேக நபர்களுக்கும் தனிப்பட்ட மற்றும் பணப் பத்திரங்களை நிறைவேற்றி நீதிமன்றம் நிபந்தனை பிணை வழங்கியுள்ளது.
திருத்தம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டவுடன், சந்தேக நபர்கள் வழக்கு முடியும் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு வந்தனர்.
எனினும் அண்மைய விதிகளின் கீழ் கைதிகளுக்கு பிணை வழங்குவது பற்றி பரிசீலிக்க மேல் நீதிமன்றத்திற்கு அதிகாரங்களை வழங்கப்பட்டுள்ளது.
தன் அடிப்படையில் காராளசிங்கம் குலேந்திரன், மரியநாயகம் அஜந்தன், முருகையா தவேந்திரன் மற்றும் ஞானலிங்கம் ராஸ்மதன் ஆகியோருக்கு பிணை வழங்கப்பட்டது.
ஐந்தாவது சந்தேகநபரான மஹாய் அனோஜன் என்ற பெயரைக்கொண்ட அவுஸ்திரேலியாவில் வசிப்பரை மேலும் விசாரணைக்கு உட்படுத்த நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
2022 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க சட்டம்

2022 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க சட்டத்தின் ஊடாக பயங்கரவாத தடைச் சட்டத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களின் அடிப்படையில், விதிவிலக்கான சூழ்நிலையில் பிணை வழங்குவதற்கு போதுமான அதிகாரங்கள் நீதித்துறைக்கு வழங்கப்பட்டுள்ளதாக சந்தேக நபர்களின் சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளனர்.
சந்தேகநபர்கள் 2017 ஆம் ஆண்டு போதைப்பொருள் தொடர்பான தனித்தனி குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதாகவும் மன்றில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையிலேயே நாடாளுமன்ற உறுப்பினரைக் கொல்ல சதி செய்ததாகக் கூறப்படும் புதிய குற்றப்பத்திரிகை அவர்கள் மீது தாக்கல் செய்யப்பட்டதாகவும் மன்றில் குறிப்பிடப்பட்டது.
பிரதி மன்றாடியார் நாயகம், அசார்ட் நவவி, குற்றத்தின் தன்மையைக் கருத்தில் கொண்டு நடந்து வரும் வழக்குக்கு அண்மைய திருத்தம் பொருந்தாது என்ற அடிப்படையில் பிணை மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
வழக்கு விசாரணை
எவ்வாறாயினும், நான்கு சந்தேகநபர்களும் நீண்டகாலமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமையை கருத்திற்கொண்டு, மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன, அவர்களை பிணையில் செல்ல அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தில் அண்மையில் கொண்டுவரப்பட்ட திருத்தத்தின் விதிகளுக்கு அமைய நீதிமன்றத்திற்குச் செயற்படுவதற்கு உரிமையுண்டு எனவும் நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்நிலையில் வழக்கு விசாரணை அடுத்த ஆண்டு ஜனவரி 18ஆம் திகதிக்கு
ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.