இலங்கையில் பொய் கூறுவது சாதாரண விடயமாகி விட்டது-கடுப்பான தென் கொரிய அதிகாரி
இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு உதவிகளை வழங்க முடியுமா என்பது குறித்த கலந்துரையாடல் ஒன்றில் கலந்துக்கொள்ள தென் கொரிய இடர் உதவிகள் நிதியத்தின் தலைவர் நேற்று சமூக வலுவூட்டல் அமைச்சுக்கு சென்றுள்ளார்.
ராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடல் 30 நிமிடங்கள் தாமதமாக ஆரம்பமாகியுள்ளது. இதன் காரணமாக தென் கொரிய இடர் உதவி நிதியத்தின் தலைவர் சூ சோ லீ, ராஜாங்க அமைச்சர் உட்பட அதிகாரிகளை கடுமையாக விமர்சித்துள்ளதாக கூறப்படுகிறது.
தாமதம் என்பது வெட்பட வேண்டிய விடயம்
இந்த கூட்டம் 30 நிமிடங்கள் தாமதமானமை குறித்து வெட்கப்பட வேண்டும் எனவும் அரச அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் இதனை விட மிக பொறுப்புடன் வேலை செய்ய வேண்டும் எனவும் சூ சோ லீ தெரிவித்துள்ளார். சூ சோ லீ கொரிய மொழியில் உரையாற்றியதுடன் அது சிங்களத்தில் மொழிப்பெயர்க்கப்பட்டது.
அவர் மேலும் தெரிவிக்கையில், தென் கொரியாவில் இப்படியான தாமதம் நடந்திருக்குமாயின், அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்புள்ளது.
எமது நாட்டில் கூட்டம் ஒன்று நிமிடம் தாமதமானால் பிரச்சினையாகி விடுமம். அது வெட்கப்பட வேண்டிய விடயம். இலங்கையில் இது சர்வ சாதாரணமாக மாறியுள்ளது.பொய் சொல்வது பொய், வாக்குறுதிகளை வழங்குவது சாதாரண விடயமாக மாறியுள்ளது.
வெளிநாட்டவர் ஒருவர் வந்து இலங்கை பற்றி கூறுவதையிட்டு நீங்கள் வெட்கப்பட வேண்டும். இந்த நிலைமை உங்களது கலாசாரமாக மாறியுள்ளது.இதனை மாற்றிக்கொள்ளவில்லை என்றால், வர்த்தகம் முடிவுக்கு வந்து விடும். வெளிநாட்டு தொடர்புகள் முடிவுக்கு வந்து விடும்.
இந்த நிலைமை மாற வேண்டும். நாம் மிகவும் நேர்மையாகவும் நியாயமாக வேலை செய்ய வேண்டியது மிகவும் முக்கியமானது.நாம் உண்மையாக இருக்க வேண்டும். ஒருவருக்கு ஒரு பொறுப்பு வழங்கப்பட்டால், அதனை நூற்றுக்கு நூறு வீதம் நேர்மையாகவும் சரியாகவும் செய்ய வேண்டும்.
எம்மிடம் ஒரு வேலையை ஒப்படைத்தால், அதற்கு நாம் பொறுப்புக்கூற வேண்டும். பொறுப்புகளை நாம் ஏற்பதில்லை. பொறுப்புக்கூற நேரும் போது காரணங்களை கூறி நியாயப்படுத்துவது சாதாரணமாக மாறியுள்ளது.
கொரியாவில் வேலை செய்யும் இலங்கை இளைஞர்களும் இப்படியே செய்கின்றனர்
எமக்கு ஒரு பொறுப்பை வழங்கினால், அர்ப்பணிப்புடன் அதனை செய்ய வேண்டும். இலங்கையில் இருந்து கொரியாவுக்கு சென்றுள்ள இளைஞர்கள் இப்படிதான் வேலை செய்கின்றனர்.
அவர்கள் வேலை செய்யும் இடத்தில் பிரதானி இருக்கும் மேலும் கீழுமாக வேலை செய்வார்கள். பிரதானி அங்கிருந்து சென்றதும் சும்மா இருப்பார்கள். அப்படியானவர்களை நாங்கள் வேலையில் இருந்து நிறுத்தி விடுவோம்.
இலங்கை அரச அதிகாரிகள் மன்னர்களை போல் இருக்கின்றனர். இந்த நாட்டின் மனோபாவம் மாற வேண்டும்.இதற்காக நாட்டில் கல்வி முறை முற்றாக மாற்றப்பட வேண்டும். இலங்கையின் கல்வி முறை மற்றும் மக்களின் எண்ணங்கள் மாற்றமடைய வேண்டும் எனவும் சூ சோ லீ மேலும் தெரிவித்துள்ளார்.