விடுதலைப்புலிகளின் தலைவர் உயிருடன் இல்லை! திருநாவுக்கரசர் கடும் குற்றச்சாட்டு
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை முதலீடாக வைத்து சீமான் அரசியல் செய்வதாக காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் விமர்சித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடனும்,நலமுடன் இருப்பதாக உலகத்தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் வெளியிட்ட அறிவிப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பழ.நெடுமாறன் தெரிவித்த இந்த கருத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், பிரபாகரன் உயிருடன் இல்லை என்று இலங்கை இராணுவம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
சீமானின் அரசியல்
இந்நிலையில், இது தொடர்பில் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இல்லை என்பது எனக்கு நன்றாக தெரியும்.
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன், முன்னாள் முதல்வர் எம்ஜிஆர், நான் என மூவரும் ஒரே இடத்தில் உணவு உண்ணும் அளவிற்கு எங்களிடம் நெருக்கம் இருந்தது. அதனால், எனக்கு கிடைத்த தகவலின்படி, பிரபாகரன் உயிருடன் இல்லை.
பிரபாகரனை முதலீடாக வைத்து நாம் தமிழர் கட்சியின் சீமான் அரசியல் செய்து வருகின்றார். எனவே எந்த காலத்தில் சீமான் வெற்றிபெறப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், சீமான் ஒரு விவகாரம் மட்டுமல்லாமல், ஏராளமான விவகாரங்களில் தவறாக பேசி வருகின்றார். அவருக்கான இளைஞர்களை வைத்து கொண்டும் பிரபாகரனை முதலீடாக வைத்து கொண்டு அரசியல் செய்து வருகின்றார். இதனால் எந்த காலத்திலும் வெற்றி பெற போவதில்லை.
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக யார் சொன்னாலும் நான் நம்ப தாயாராக இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.