யுத்த காலப்பகுதியில் தடுப்பு மருந்து ஏற்ற ஒத்துழைப்பு வழங்கிய தமிழீழ விடுதலைப் புலிகள்!
யுத்த காலப் பகுதியில் வடக்கில் தடுப்பு மருந்து ஏற்ற தமிழீழ விடுதலைப் புலிகள் ஒத்துழைப்பு தந்தார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
விசர்நாய்க்கடி நோயை ஒழித்தல் மற்றும் நாய்களைப் பதிவு செய்தல் சட்டமூலம் தொடர்பிலான நேற்றைய(23.10.2026) நாடாளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, நமது நாட்டின் பொதுச் சுகாதாரம், மனித உயிர்களின் பாதுகாப்பு, விலங்கு நலன் மற்றும் அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் ஆகியவற்றுடன் நேரடியாகத் தொடர்புடைய ஒரு முக்கியமான விடயத்தைப் பற்றியதாகும்.
விசர் நாய்கடி
இலங்கையில் விசர் நாய்க்கடி நோயை முற்றாக ஒழிப்பதும், அதற்காக முன்வைக்கப்பட்டுள்ள “விசர்நாய்க்கடி நோயை ஒழித்தல் மற்றும் நாய்களைப் பதிவு செய்தல் சட்டமூலத்தை” வரவேற்பதோடு அதை நடைமுறைப்படுத்துவதற்கு நீங்கள் எடுக்கும் முயற்சிக்கு ஆதரவளிக்க தயாராகவுள்ளேன்.

விசர் நாய்க்கடி நோய் என்பது சாதாரணமாகக் கருதப்படக் கூடிய ஒரு நோயல்ல. நோயின் அறிகுறிகள் தோன்றிய பின்னர் எப்போதும் உயிரிழப்பை ஏற்படுத்துகிறது.
ஆனால், உரிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டால் இந்த நோயினால் ஏற்படும் மனித உயிரிழப்புகளைத் தடுக்க முடியும். இது வெறுமனே நாய்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பான பிரச்சினை அல்ல.
பூரண ஒத்துழைப்பு
யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்தில் நாம் வடக்கு மாகாணத்தில் குழந்தைகளுக்கான தடுப்பு மருந்தேற்றல் வீதமானது நாட்டின் ஏனைய பிரதேசங்களுக்கு நிகராக அல்லது அவர்களிலும் விட சிறப்பாக செய்திருதோம். காரணம் தமிழீழ விடுதலைப்புலிகள் உட்பட அனைத்துத்தரப்பினரும் பூரண ஒத்துழைப்பு தந்ததேயாகும்.

இது மனித உயிர்களைப் பாதுகாப்பது, அரசாங்கத்தின் பொறுப்பை உறுதிப்படுத்துவது, விலங்குகளின் நலனைப் பேணுவது மற்றும் எமது கிராமங்களையும் நகரங்களையும் பாதுகாப்பானவையாக மாற்றுவது தொடர்பான தேசியப் பொறுப்பாகும்.
இலங்கை கடந்த பல தசாப்தங்களில் விசர் நாய்க்கடி நோயைக் கட்டுப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது.ஒரு மனித உயிரைக்கூட இழக்க வேண்டிய அவசியமில்லாத நோயினால், ஒரு குடிமகனும் உயிரிழக்காத நிலையை உருவாக்குவதே எமது இலக்காக இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.