முறையற்ற வகையில் குப்பை கொட்டுவோருக்கு இனி அபராதம்! அதிரடி முடிவு
கிளிநொச்சி - கரைச்சி பிரதேச சபைக்கு உட்பட்டபிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் முறையற்ற குப்பை அகற்றும் பழக்கத்தினால் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரத் தன்மைகள் பாதிக்கப்படுகின்றன.
அனுமதியின்றி இரவுகளில் குப்பைக் கொட்டுவோரைக் கேமராக்கள் மூலம் கண்டறிந்து, அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார்.
நேற்று(23.10.2026) அவர் ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சுற்றாடல் பாதிப்புகளுக்கு எதிராகச் செயல்படுத்தப்படும் புதிய திருத்தங்களின்படி, அபராதத் தொகை முன்பு இருந்த 10,000 ரூபாவிலிருந்து 1 இலட்சம் தொடங்கி 10 இலட்சம் ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
2027ஆம் ஆண்டு முதல் பொலித்தீன், பிளாஸ்டிக், மக்கக்கூடிய கழிவுகள் மற்றும் கண்ணாடி எனத் தரம் பிரிக்கப்பட்ட குப்பைகளை மட்டுமே பொதுமக்கள் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்களிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை
பிரதேச சபையின் வழிகாட்டுதலின்படி, 40 சுகாதாரத் தொழிலாளர்கள் இருக்க வேண்டிய இடத்தில், தற்போது 11 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அரசாங்கம் இந்த காலிப் பணியிடங்களை நிரப்புவதில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

போதிய வாகனங்கள் மற்றும் நிதி இருந்த போதிலும், பணியாளர்களைப் பெறுவதிலும் அவர்களைத் தக்கவைப்பதிலும் பெரும் சவால்கள் நிலவுகின்றன.
பொதுமக்கள் அனைவரும் தங்கள் சொந்தக் குப்பைகளைத் தாங்களே முறையாகச் சேமித்து, பிரதேச சபையின் குப்பை வண்டிகளிடம் ஒப்படைக்க வேண்டும். நமது மண்ணை அழகுபடுத்தவும் சுத்தமாகப் பேணவும் பொதுமக்கள், வணிகர்கள் மற்றும் அரசாங்கம் அனைவரும் இணைந்து கூட்டு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.