ஞானசாரருக்கான போராட்டத்தில் ஏற்பட்டுள்ள பதற்றநிலை.. அரச அதிகாரிகளுடன் முரண்பட்ட பிக்குகள்
விகாரமகாதேவி பூங்காவில் இடம்பெற்று வரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பௌத்த துறவிகளுக்கும், கொழும்பு மாநகரசபை அதிகாரிகளுக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
போராட்ட இடத்தில் பௌத்த துறவிகளால் கட்டப்பட்டிருந்த பௌத்த கொடிகள் மற்றும் பதாகைகளை மாநகரசபை அதிகாரிகள் அகற்ற முயன்றுள்ளனர்.
விகாரமகாதேவி பூங்காவிற்குப் பொறுப்பான அதிகாரிகள், சத்யாகிரகத்தில் ஈடுபட்டுள்ள பிக்குகளை அணுகி, அந்தப் பதாகைகள் மற்றும் கொடிகளை அவர்களாகவே அகற்றுமாறு அல்லது அதற்குரிய கட்டணத்தைச் செலுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
பதற்றநிலை
அவ்வாறு செய்யத் தவறினால், அவற்றை தாங்களே அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகாரிகளின் இந்தக் கோரிக்கைக்கு சத்யாகிரக இடத்தில் இருந்த துறவிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்து, இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இருப்பினும், பூங்கா அதிகாரிகள் பதாகைகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தபோதிலும், அங்கு கூடியிருந்த பிக்குகளும் பொதுமக்களும் அவற்றை மீண்டும் அதே இடத்தில் தொங்கவிட்டுள்ளனர்.
பூங்கா வளாகத்தில் பதாகைகளை வைப்பதற்கு மாநகரசபை அல்லது உரிய அதிகார அமைப்புகளுக்குக் கட்டணம் செலுத்த வேண்டி இருப்பின், அதற்கான கட்டண விகிதங்களைத் தெரிவித்தால் அதை உடனடியாகச் செலுத்தத் தயார் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.