குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கான அரசாங்கத்தின் கொடுப்பனவு! எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
நியாயமற்ற முறையில் எவருக்கேனும் கொடுப்பனவுகள் இடைநிறுத்தப்பட்டிருந்தால், அது தொடர்பில் ஜனாதிபதியிடம் எழுத்து மூலம் அறிவிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம் என பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொகுதி அமைப்பாளர்களுக்கு அஸ்வெசும திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ள பயனாளர்கள் தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் கிடைத்தவண்ணமுள்ளன. இது மிகவும் சிக்கலான விடயமாகும்.
எவ்வாறிருப்பினும் தற்போது மேன்முறையீட்டுக்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. கட்சி என்ற ரீதியில் நாம் இது தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் இருக்கின்றோம்.
ஜனாதிபதியுடன் கலந்துரையாட எதிர்பார்ப்பு
கோவிட் காலத்தில் இவ்வாறான கொடுப்பனவுகள் வழங்கும் வேலைத்திட்டத்தின் போது குடும்பங்கள் அடிப்படையிலேயே வழங்கப்பட்டது. மாறாக வீடுகளை அடிப்படையாகக் கொண்டு எந்தவொரு கொடுப்பனவும் வழங்கப்படவில்லை.
அஸ்வெசும குறுகிய கால வேலைத்திட்டமாகும். எனவே அதற்கு அப்பால் சென்று மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும். இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் நேரடியாக கலந்துரையாட எதிர்பார்த்துள்ளோம்.
நியாயமற்ற முறையில் எவருக்கேனும் கொடுப்பனவுகள் இடைநிறுத்தப்பட்டிருந்தால் , அது தொடர்பில் ஜனாதிபதியிடம் எழுத்து மூலம் அறிவிப்பதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளோம்.
அதே போன்று சமுர்த்தி பயனாளிகளுக்கு அந்த கொடுப்பனவு நிறுத்தப்பட்டிருந்தால் அது தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கும் தயாராகவுள்ளோம் என குறிப்பிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |