யாழ்ப்பாணத்திற்கு குறைந்தளவு எரிபொருள் விநியோகம்: வரிசையில் நிற்கும் மக்கள்
யாழ்ப்பாண மாவட்டத்திற்கு குறைந்தளவு எரிபொருள் விநியோகம் செய்யப்பட்டதால் பெட்ரோலுக்கான வரிசை அதிகளவில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, கடந்த நான்கு மாத கால பகுதியில் பெட்ரோல் பெற்றுக்கொள்வதற்கான வரிசைகள் காணப்படாத போது , இந்த மாதமே பெட்ரோலுக்கான வரிசை அதிகளவில் காணப்படுகிறது. அதற்கான காரணம் இந்த மாதம் யாழ்ப்பாணத்திற்கு விநியோகம் செய்யப்பட்ட பெட்ரோலின் அளவு குறைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர், 18 நாட்களில் ஒக்டோன் 92 பெட்ரோல் 16 இலட்சத்து 10ஆயிரத்து 400 லீட்டர் யாழ்ப்பாணத்தில் விநியோகிக்கப்பட்டதாக யாழ்.மாவட்ட செயலாளர் க.மகேசன் தெரிவித்து இருந்தார்.
அந்த செய்தி வெளியான போது , பலரும் சமூக வலைத்தளங்களில் "பெட்ரோலை குடிக்கும் யாழ்ப்பாணத்தான்" , யாழ்ப்பாணத்தானிடம் பெட்ரோலை வாங்க வேண்டிய நிலையில் இலங்கை அரசாங்கம் " என யாழ்ப்பாண மக்களை குற்றம் சாட்டியும் கேலி செய்தும் பதிவுகளை வெளியிட்டனர்.
யாழ்.மாவட்ட செயலகத்தின் புள்ளிவிபரம்
இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி வரையிலான பெட்ரோல் விநியோகம் தொடர்பில் யாழ்.மாவட்ட செயலகத்தின் புள்ளி விபரங்களுடன் ஆராய்ந்த போது,
ஜனவரி மாதம் சூப்பர் பெட்ரோல் 79ஆயிரத்து 200 லீட்டரும், பெட்ரோல் 34 இலட்சத்து 65ஆயிரம் லீட்டரும் விநியோகிக்கப்பட்டுள்ளது.
பெப்ரவரி மாதம் சூப்பர் பெட்ரோல் 85 ஆயிரத்து 800 லீட்டரும் , பெட்ரோல் 33 இலட்சத்து 72 ஆயிரத்து 600 லீட்டரும் விநியோகிக்கப்பட்டுள்ளது.
மார்ச் மாதம் சூப்பர் பெட்ரோல் 59 ஆயிரத்து 400 லீட்டரும் பெட்ரோல் 37 இலட்சத்து 81ஆயிரத்து 800 லீட்டரும் விநியோகிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 1ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரையில் சூப்பர் பெட்ரோல் 13ஆயிரத்து 200 லீட்டரும், பெட்ரோல் 19 இலட்சத்து 50ஆயிரத்து 300 லீட்டரும் விநியோகிக்கப்பட்டுள்ளது. அதில், அதிகளவாக மார்ச் மாதம் சூப்பர் பெட்ரோல் மற்றும் பெட்ரோல் 38 இலட்சத்து 41 ஆயிரத்து 200 லீட்டர் விநியோகிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், யாழ்ப்பாணத்தில் மாதம் ஒன்றுக்கு அண்ணளவாக 35 இலட்சம் லீட்டருக்கும் அதிகமான பெட்ரோல் தேவைப்படுகின்றது. இருப்பினும், கடந்த 2ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரையிலான கால பகுதியில் சூப்பர் பெட்ரோல் விநியோகம் நடைபெறவில்லை. ஆனால் பெட்ரோல் 16 இலட்சத்து 10ஆயிரத்து 400 லீட்டர் விநியோகிக்கப்பட்டுள்ளது.
அந்த காலப்பகுதியில் ஏப்ரல் மாத புள்ளி விபரங்களுடன் ஒப்பிடுகையில் போதிய அளவான பெட்ரோல் விநியோகிக்கப்படவில்லை. ஏனெனில் ஏப்ரல் மாதம் 1ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரையில் சூப்பர் பெட்ரோல் 13ஆயிரத்து 200 லீட்டரும், பெட்ரோல் 19 இலட்சத்து 50ஆயிரத்து 300 லீட்டர் விநியோகிக்கப்பட்டுள்ளது.
அதாவது ஏப்ரல் மாதம் 1ஆம் திகதி தொடக்கம் 20 ஆம் திகதி வரையில் 19 இலட்சத்து 63ஆயிரத்து 500 லீட்டர் பெட்ரோல் விநியோகிக்கப்பட்டுள்ளது. ஆனால் மே 2 ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் சூப்பர் பெட்ரோல் விநியோகம் இல்லாமல் 16 இலட்சத்து 10ஆயிரத்து 400 லீட்டர் பெட்ரோல் விநியோகிக்கப்பட்டுள்ளது.
மொத்தமாக இந்த கால பகுதியில் 3 இலட்சத்து 53 ஆயிரத்து 100 லீட்டர் பெட்ரோல் குறைவாகவே விநியோகிக்கப்பட்டுள்ளது.
யாழ்.மாவட்டத்தில் விநியோகிக்கப்பட்ட ஏனைய எரிப்பொருட்களின் விபரம்
அதேவேளை கடந்த ஏப்ரல் மாதம் 1ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரையில் ஏனைய எரிபொருளான டீசல் 16 இலட்சத்து 96ஆயிரத்து 200 லீட்டரும் , சூப்பர் டீசல் ஒரு இலட்சத்து 5ஆயிரத்து 600 லீட்டரும் , மண்ணெண்ணெய் 8 இலட்சத்து 84ஆயிரத்து 400 லீட்டரும் விநியோகிக்கப்பட்டுள்ளது.
ஆனால் மே மாதம் 2ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் டீசல் 8 இலட்சத்து 81 ஆயிரத்து 100 லீட்டரும் மண்ணெண்ணெய் 4 இலட்சத்து 48 ஆயிரத்து 800 லீட்டரும் சூப்பர் டீசல் ஒரு இலட்சத்து 25 ஆயிரத்து 400 லீட்டரும் விநியோகிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் ஒக்டேன் 95 அக் கால பகுதியில் விநியோகிக்கப்படவில்லை.
இதனடிப்படையில் கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த மாதம் 2ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரையில் டீசல் 8 இலட்சத்து 15ஆயிரத்து 100 லீட்டரும் , மண்ணெண்ணெய் 4 இலட்சத்து 35 ஆயிரத்து 600 லீட்டரும் குறைவாகவே விநியோகிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.