தாமரைக் கோபுரத்தின் ஒரு தளத்தை வாடகைக்கு விட ஒப்பந்தம்
கொழும்பு தாமரை கோபுரம் வளாகத்தில் நீர் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு பகுதியாக அமைக்க ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட உள்ளது.
தாமரை கோபுரத்தில் அடுத்த ஆறு மாதங்களுக்குள் முழு அளவிலான சூதாட்ட விடுதி மற்றும் நீர் விளையாட்டுகள் உள்ளிட்ட பொழுதுபோக்கு பகுதிகள் உருவாக்கப்படும் என ஊடகவியலாளர் சந்திப்பின் பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய ஒப்பந்தம்
கொழும்பு தாமரை கோபுரத்தின் நிர்வாக அமைப்பான, லோட்டஸ் மேனேஜ்மென்ட் கம்பனி (பிரைவேட்) லிமிடெட் (எல்டிஎம்சி), கொழும்பு தாமரை கோபுரத்தின் ஒரு தளத்தை சிங்கப்பூரை தளமாகக் கொண்ட நிறுவனத்திற்கு கேசினோ மற்றும் நீர் உட்பட பொழுதுபோக்கு பகுதிக்காக வாடகைக்கு எடுப்பதற்கான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக ஆண்டுக்கு 1.4 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெறமுடியும் என தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்காக கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது, சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, அடுத்த மூன்று வருடங்களில் இந்த முதலீடு 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை கொண்டு வரும் என்று கூறினார்.
இருப்பினும் இந்த தொகைக்கான எந்த ஆதாரத்தையும், அவர் வழங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.