நேபாளத்திலிருந்து செவ்வந்தியை இழுத்து வந்த பொலிஸ்: இலங்கையில் கோட்டை விட்டது ஏன்....!
இலங்கையில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என குற்றம் சாட்டப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் இலங்கைக்கு இழுத்து வரப்பட்டுள்ளார்.
கடந்த ஏழு மாதங்களாக பொலிஸாருக்கு பெரும் தலைவலியை கொடுத்த 26 வயதான செவ்வந்தி நேபாளத்தில் வீடொன்றில் பதுங்கியிருந்த நிலையில் சிறப்பு நடவடிக்கையின் மூலம் கைது செய்யப்பட்டார்.
இந்த கைது நடவடிக்கையின் மூலம் இலங்கை பொலிஸார் மற்றும் புலாய்வுத்துறையின் அபார திறமை குறித்து சர்வதேச ரீதியாக பேசப்பட்டு வருகிறது.
செவ்வந்தியின் பிரபலத்தன்மை
எனினும் அந்த பெருமைக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் செவ்வந்தி தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பதிவுகள் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் செவ்வந்தி உட்பட கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் பொலிஸாரினால் அழைத்து வரப்பட்ட விதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாரதூரமான குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளையோ அல்லது சந்தேக நபர்களை அழைத்து வரும் போதோ அவர்களின் முகங்களை மூடி மற்றவர்களுக்கு தெரியாத வகையில் அழைத்து வருவது வழமையாகும். பொலிஸாருக்குள்ள மரபுகளில் இதுவும் ஒன்றாகும்.
எனினும் சில வாரங்களுக்கு முன்னர் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட குழுவினரை அழைத்து வரும் போதும் அவர்களின் முகங்கள் மறைக்கப்படவில்லை. அது தொடர்பான காட்சிகள் ஊடகங்கள் பதிவு செய்யவும் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.
பொலிஸாரின் தவறு
அதேபோன்று செவ்வந்தி தலைமையிலான குழுவை இழுத்து வரும் நிலையில் அவர்களை அழைத்து வந்தமை போன்றதொரு தோற்றத்தை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
வெளிநாடொன்றுக்கு சுற்றுலா சென்று நாடு திரும்பிய பிரபலம் ஒன்றை பலத்த பாதுகாப்புடன் அழைத்து வருவது போன்றதொரு தோற்றப்பாடே அதன்மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ள செவ்வந்தி இன்று சமூக வலைத்தளங்களில் கதாநாயகியாக வலம் வந்து கொண்டு இருக்கின்றார். இதற்கு செயற்கை நுண்ணிறவும் வலுச்சேர்ந்துள்ளது.
செவ்வந்தி அழகான பெண் என்ற கோட்பாட்டுக்குள் கொலைகாரி என்ற கோரமான குற்றம் மறைக்கப்பட்டு, இளம் சமூகத்தினர் மத்தியில் பிரபல்யம் அடைத்தவராக மாறியுள்ளார்.
இவ்வாறான நிலைக்கு பொலிஸாரே பிரதான காரணம் என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பொலிஸ் கட்டுப்பாடுகளுக்கு அமைய சந்தேக நபர்களை அழைத்து வந்திருந்தால், இவ்வாறானதொரு பிரபலத்தன்மை ஏற்பட்டிருக்காது என்பது பலரின் வாதமாகும்.
90 நாட்கள் தடுத்து வைக்க அனுமதி
செவ்வந்தி தொடர்பில் சமூக வலைத்தள செயற்பாட்டுக்கு பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இவ்வாறான பிரபலத்தன்மை அழகை மெருகூட்டும் கிறீம்களுக்கான விளம்பர படங்களில் இஷாரா நடிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தும் என்றும் சாடியிருந்தார்.
இதேவேளை, நேபாளத்தில் இருந்து அண்மையில் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான இஷாரா செவ்வந்தியை தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அவரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு பொலிஸார் பாதுகாப்பு அமைச்சிடம் அனுமதி கோரியிருந்தனர். பொலிஸாரின் இந்த கோரிக்கைக்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



