சிறையில் அடைக்கும்படி பணிப்புரை விடுத்தால் சிறையில் அடைப்போம்! விடுவிக்க கூறினால் விடுதலை செய்வோம் - இராஜாங்க அமைச்சர்
மேல் மட்டத்தில் இருந்து வந்த பணிப்புரைக்கு அமைவாகவே துமிந்த சில்வா விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக் கைதிகள் புனர்வாழ்வளிப்பு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே தெரிவித்துள்ளார்.
ஹிருணிகா பிரேமச்சந்திர, ஜனாதிபதிக்கு எழுதிய கடிதம் தொடர்பாக மட்டக்களப்பு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
கைதிகளை விடுதலை செய்வது தொடர்பாக எங்களுக்கு எந்தவிதமான அதிகாரமும் இல்லை.
இருந்தாலும் மேல் மட்டத்தில் இருந்து வரும் பணிப்புரைக்கு அமைவாக தான் அண்மையில் துமிந்த சில்வா உட்பட தமிழீழ் விடுதலைப் புலிகளின் புனர்வாழ்வளிக்கப்பட்ட உறுப்பினர்களும், இன்னும் சிலரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஆகவே அது எங்களுடைய முடிவு அல்ல. ஒருவரை சிறைச்சாலையில் அடைக்கும்படி பணிப்புரை விடுத்தால் அவர்களை நாங்கள் சிறைச்சாலையில் வைத்திருப்போம்.
அவரை விடுதலை செய்ய சொன்னால் நாங்கள் விடுதலை செய்வோம். இதுதான் எங்களுடைய செயற்பாடாக இருக்கின்றது. இந்த விடுதலை தொடர்பாக என்னால் எதுவும் கூற முடியாது என குறிப்பிட்டுள்ளார்.