அடுத்த கட்டப் பேச்சுக்கு முன்னர் முன்னேற்றம் கட்டாயம்: சம்பந்தன் இடித்துரைப்பு
அரசாங்கத்திற்கு தமிழ்க் கட்சிகள் விதித்த காலக்கெடு இன்றுடன் (17.01.2023) நிறைவடையும் நிலையில், முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளில் முன்னேற்றம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை, அடுத்த கட்டப் பேச்சுக்கு முன்னர் முன்னேற்றம் கட்டாயம் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு ஒரு வார கால அவகாசம்
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், கடந்த 10ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இறுதியாக நடைபெற்ற பேச்சின் போது நில விடுவிப்பு, அதிகாரப் பகிர்வு, அரசியல் கைதிகள் விடுதலை உள்ளிட்ட உடனடி விடயங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கத்திற்கு ஒரு வார கால அவகாசம் வழங்கியிருந்தோம்.
அந்த விடயங்களில் இன்னமும் முன்னேற்றம் ஏற்பட்டதாக தெரியவில்லை.
எனினும் பொங்கல் தினமன்று (நேற்று முன்தினம்) யாழ்ப்பாணத்தில் எமது நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஜனாதிபதி நடத்திய சந்திப்பின் போது நில விடுவிப்பு தொடர்பில் சில உத்தரவாதங்களை வழங்கியுள்ளார்.
அடுத்த கட்டப் பேச்சுக்கான அழைப்பு
ஜனாதிபதியின் இந்த உத்தரவாதங்களைப் படையினர் செயற்படுத்துவார்களா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ஜனாதிபதியிடமிருந்து அடுத்த கட்டப் பேச்சுக்கான அழைப்பு இன்னமும் எமக்கு வரவில்லை.
அழைப்பு வந்தால்தான் அந்தப் பேச்சில் நாம் பங்குபற்றுவதா? இல்லையா? என்பது தொடர்பில் முடிவு எடுப்போம்.
அடுத்த கட்டப் பேச்சுக்கு முன் ஜனாதிபதியிடம் நாம் ஏற்கனவே முன்வைத்த கோரிக்கைகளில் கட்டாயம் முன்னேற்றம் ஏற்பட்டிருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri
