உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பில் ரணில் வெளியிட்ட அச்சம்
இலங்கையின் சர்வதேச இறையாண்மை பத்திரத்தை (ISB) வைத்திருப்பவர்கள் உள்நாட்டு கடன் மறுசீரமைப்புக்காக அரசாங்கத்துக்கு அழுத்தத்தை மேற்கொள்ளக்கூடும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற நிபுணத்துவ சங்கங்களின் அமைப்பு (OPA) ஆண்டு மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,
“சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிணை எடுப்பைப் பெறுவதற்கு ஒரு முன்நிபந்தனையாக இருப்பதால், இந்த முனைப்பை சர்வதேச இறையாண்மை பத்திரத்தை (ISB) வைத்திருப்பவர்கள் கோரக்கூடும்.
இதில் மிகவும் கடினமான பிரச்சினை என்னவென்றால், தனியார் கடன் வழங்குபவர்களை எவ்வாறு கையாள்வது? என்பதாகும். முதலீடு செய்பவர்கள் அனைவரும் கோடிஸ்வரர்கள் அல்லர்.
இதில் ஓய்வூதிய நிதிகள் மற்றும் பிற வருவாய்களை கொண்டவர்களும் உள்ளனர். எனவே, அவர்கள் அந்த வெட்டை (கடன் மறுசீரமைப்புக்கு) இணங்குவார்களா என்பதை தீர்மானிக்க வேண்டும்.
பொருளாதார வல்லுநர்களின் எச்சரிக்கை
ஏற்கனவே, ரூபாய் மதிப்பிலான உள்நாட்டுக் கடனை முழு அளவில் மறுசீரமைப்பது நாட்டின் வங்கித் துறையில் கடுமையான தாக்கங்களைக் கொண்டு வந்து, நிதி அமைப்பின் ஸ்திரத்தன்மைக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று நிதி வல்லுநர்கள் மற்றும் பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
கடன் மறுசீரமைப்பில் இலங்கையின் நிதி ஆலோசகரான லாசார்ட் தற்போது நாட்டிற்கான கடன் நிலைத்தன்மை திட்டத்தை தயாரித்து வருகிறது. மேலும் அரசாங்கம் ஏற்கனவே இந்தியாவுடன் கடன் மறுசீரமைப்பைத் தொடங்கியுள்ளது. எவ்வாறாயினும், சீனாவே இன்னும் இந்த நடைமுறைக்கு முதல் தடையாக உள்ளது.
ஜப்பானுடன் பேச்சுவார்த்தை
மேற்கத்திய நாடுகள், மறுசீரமைப்பு வேண்டும் என்று நினைக்கின்றன, எனினும் சீனர்கள் இந்தக் கடன்களை அடைக்க கூடுதல் கடன்களை வழங்க விரும்புகிறார்கள். எனவே, ஒரு அணுகுமுறை இருக்க வேண்டும், இதை எவ்வாறு அடைய முடியும் என்பது குறித்து தற்போது ஜப்பானுடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
சீனாவுடனும் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படும். இதேவேளை கடன் நிலைப்புத் திட்டத்திற்கு உடன்பட்டதன் பின்னர், அரசாங்கம் வரிகளை அதிகரிக்க நிர்ப்பந்திக்கப்படும், இது திவால் நிலைகளை விளைவிக்கும், குறிப்பாக சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களை பாதிக்கும் மற்றும் வங்கித் துறையின் சொத்து தரத்தில் மேலும் அழுத்தத்தை சேர்க்கும். எவ்வாறாயினும், பாதிப்பைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்வைக்கும்” என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதன்போது உறுதியளித்தார்.
மேலும், அரசியலமைப்பின் முன்மொழியப்பட்ட 22 வது திருத்தம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, வங்கிகள் மற்றும் நிதிச் சேவைகள் தொடர்பான நாடாளுமன்ற மேற்பார்வைக் குழுவை நியமிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாகவும் ரணில் விக்கிரமசிங்க, இதன்போது தெரிவித்துளளார்.
இலங்கையர்களுக்கு அவசர அறிவுறுத்தல்! நிதியமைச்சர் பிறப்பித்துள்ள உத்தரவு |
கோட்டாபயவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை |