வாழ்க்கை செலவு அதிகரிப்பு தொடர்பில் ஜனாதிபதியிடம் நாமல் விடுத்துள்ள கோரிக்கை
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வாழ்க்கை செலவு உயர்வு தொடர்பில் தனது தெளிவான பதில்களை வழங்க வேண்டுமென ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கைது நடவடிக்கைகள், விசாரணைகள் மற்றும் நீதிமன்ற வழக்குகள் குறித்து ஜனாதிபதி கருத்துக்களைத் தெரிவிப்பதை விட, அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுக்கே பொதுமக்கள் பதில்களை எதிர்பார்க்கிறார்கள் என சுட்டிக்காட்டியுள்ளார்.
வாழ்க்கைச் செலவுப் பிரச்சினை
ஜனாதிபதி பொலிஸ், குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) மற்றும் நீதிமன்றங்களைக் கண்காணிப்பது போல, நாடாளுமன்றத்தில் இருந்து கொண்டு "கைதுகள், விசாரணைகள் மற்றும் தீர்ப்புகள் குறித்து முன்கூட்டியே கணிப்புகளைக் கூறக் கூடாது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
வழக்குகள் இருந்தால், சட்டம் தன் கடமையைச் செய்யட்டும். எவ்விதமான விசாரணைக்கும், சட்ட நடைமுறைகளுக்கும் முகங்கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.
ஏனெனில் எங்களுக்கு நீதித்துறையின் மீது நம்பிக்கை உள்ளத என அவர் கூறியுள்ளார்.
இலங்கை முழுவதும் உள்ள குடும்பங்கள் விலைவாசி உயர்வு மற்றும் வீட்டுச் செலவுகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால், அரசாங்கத்தின் கவனம் இந்த வாழ்க்கைச் செலவுப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் மட்டுமே இருக்க வேண்டும் என்று நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தூய்மையான ஆட்சியை வழங்குவோம் என்ற வாக்குறுதியுடன் ஆட்சிக்கு வந்த போதிலும், தற்போதைய அரசாங்கம் கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அரசாங்கத்தின் அமைச்சர்கள் பொறுப்புக்கூறல் இன்றி சொத்துக்களைக் குவித்து வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், அரசாங்க உறுப்பினர்களுக்கு எதிரான இந்த ஊழல் முறைப்பாடுகள் குறித்து இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
எனவே, கைதுகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்து தேவையற்ற கருத்துக்களை வெளியிடுவதைத் தவிர்த்து, நாட்டின் பொருளாதார சவால்கள் மற்றும் ஊழல் தொடர்பான பொதுமக்களின் கரிசனைகள் குறித்து ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.