லிட்ரோ எரிவாயு விநியோகம் சாத்தியமில்லை: வெளியானது காரணம்
லிட்ரோ நிறுவனத்திற்கு எரிவாயு ஏற்றி வந்த கப்பலுக்கான கட்டணத்தை செலுத்த முடியாத நிலையில் லிட்ரோ நிறுவனம் உள்ளதாக தெரியவந்துள்ளது.
டொலர் இன்றி லிட்ரோ நிறுவனம் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாகவும் இதன் காரணமாகவே கப்பலுக்கான கட்டணத்தை செலுத்த முடியாத நிலையில் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
கடந்த 08ம் திகதி 3900 மெட்ரிக் தொன் எரிவாயு ஏற்றிய கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்து நங்கூரமிட்டுள்ளது.
டொலர் பற்றாக்குறை
குறித்த கப்பலுக்கான கட்டணத்தில் 25 மில்லியன் டொலர் பற்றாக்குறை காரணமாக கப்பலுக்கான கட்டணத்தை செலுத்திக் கொள்வதில் லிட்ரோ நிறுவனம் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இதனையடுத்து கடந்த ஐந்து நாட்களாக கப்பல் துறைமுகத்துக்கு வௌியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தற்போதைக்கு 2.5 மில்லியன் டொலருக்கு மேல் தாமதக் கட்டணமும் சேர்ந்து கொண்டுள்ளதால் லிட்ரோ நிறுவனம் பெரும் நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளது.
நீண்ட வரிசையில் மக்கள்
இதற்கிடையே கடந்த ஒன்பது நாட்களாக லிட்ரோ நிறுவனம் எரிவாயு விநியோகிக்கவில்லை.
இந்நிலையில் ஏராளமான பொதுமக்கள் எரிவாயு கொள்கலனுடன் விநியோக நிலையங்கள் அருகில் நீண்ட வரிசைகளில் நாட்கணக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இருப்பினும் நாளைய தினமும் லிட்ரோ எரிவாயு விநியோகம் சாத்தியமில்லை என்றே தெரியவந்துள்ளது.



