எரிவாயுவை தேவையற்ற முறையில் குவித்து வைக்க வேண்டாம்! லிட்ரோ நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு
நாட்டில் நிலவும் எரிவாயு பற்றாக்குறை வரும் நாட்களில் முடிவுக்கு வரும் என்றும், எரிவாயு கையிருப்பை தேவையற்ற முறையில் குவித்து வைக்க முயற்சிக்க வேண்டாம் என்று லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
நேற்று (18 ஆம் திகதி) நாட்டிற்கு வந்தடைந்த 3900 மெட்ரிக் டொன் எரிவாயுவை கொண்ட கப்பலில் இருந்து வரும் எரிவாயு, அடுத்த மூன்று நாட்களில் நாடு முழுவதும் விநியோகிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
எரிவாயு உருளைகள் விநியோகம்
16 ஆம், 17ஆம் மற்றும் 18ஆம் திகதிகளில் (350,000) எரிவாயு உருளைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

மேலும், இன்று (19ஆம் திகதி), நாளை (20ஆம் திகதி) மற்றும் நாளை மறுநாள் (21ஆம் திகதி) அன்று கூடுதலாக 350,000 உருளைகள் விநியோகிக்கப்படும்.
ஏதேனும் எரிவாயு பற்றாக்குறை ஏற்பட்டாலும், கோரப்பட்ட எரிவாயு கையிருப்பு எதிர்காலத்தில் நாட்டிற்கு வந்து சேரும் என்பதால் எந்த பிரச்சினையும் இல்லை என்றும் கூறியுள்ளார்.
லாஃப் எரிவாயு கொள்முதலில் சிக்கல்கள்
நேற்று (18 ஆம் திகதி) நாட்டிற்கு வந்தடைந்த ஃபிரான்குவாஸ் கப்பலில் இருந்து விநியோகிக்கப்பட்ட எரிவாயு கையிருப்பை தேவையற்ற முறையில் குவித்து வைக்க முயற்சிக்க வேண்டாம் என்றும் லிட்ரோ தலைவர் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
மத்திய கிழக்கில் நிலவும் பதற்ற சூழல் காரணமாக லாஃப் எரிவாயு கொள்முதலில் சில சிக்கல்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இருப்பினும் நாட்டிற்கு தேவையான எரிவாயுவை மாற்று வழிகள் மூலம் கொள்முதல் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் லாஃப் நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.