யாழில் இடம்பெறும் முறைகேடு! அரச ஊழியர்கள் மீது அமைச்சர் காட்டம்
யாழில் இடம்பெற்றுவரும் சுண்ணக்கல் அகழ்வின் விளைவுகளுக்கு அரச அதிகாரிகள் பொறுப்புக்கூற வேண்டும் என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் காட்டமாக தெரிவித்துள்ளார்.
யாழ்.(Jaffna) தென்மராட்சியில் சட்ட விரோதமான முறையில் சுண்ணக்கல் அகழப்படுவதாக கூறப்படும் இடங்களை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்(Ramalingam Chandrasekar) நேற்றையதினம் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
இதன்போது கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும், சுண்ணக்கல் அகழ்வு தொடர்பில் விசாரணைகள் அனைத்தும் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் இதன்போது உறுதியளித்தார்.
சுண்ணக்கல் அகழ்வு
தென்மராட்சிப் பிரதேசத்தின் சரசாலை வடக்கு மற்றும் மந்துவில் பகுதிகளில் அதிகளவான சுண்ணக்கல் அகழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறித்த இடங்களுக்கு நேரில் சென்று களநிலவரங்களை அமைச்சர் இதன்போது ஆராய்ந்தார்.
இதன்போது. அமைச்சருடன் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன்(Ilankumaran) மற்றும் அதிகாரிகள் சிலரும் சென்றிருந்தனர்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர்,
“ஒரு லொறியில் சுண்ணக்கல் ஏற்றி சென்றபோது, நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் வழிமறித்து அந்த லொறியை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளார்.
இந்த விடயமானது கடந்த சில தினங்களாக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில் நீங்கள் செய்தது தவறு, குற்றச்செயல்கள் இடம்பெறும்போது அவற்றினை பொலிஸாருக்கு தெரியப்படுத்தி, அவர்கள் மூலமாக வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நான் இளங்குமரனுக்கு அறிவுறுத்தினேன்.
ஆனால் தற்போது பார்க்கும் பொழுது இளங்குமரன் செய்தது பரவாயில்லை அல்லது நல்லது என்று தோன்றுகிறது. இளங்குமரனின் இந்த வேலையால் அனைவரும் கலக்கமடைந்திருப்பதை அவதானிக்க முடிகிறது”என குறிப்பிட்டுள்ளார்.
மேலதிக செய்தி: கஜிந்தன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |