ஆசிரியையின் உயிர் நீர்ப்பானது எமது போராட்டத்திற்கு வலுசேர்த்தது: வவுனியா மாவட்ட இணைப்பாளர்
தெனியாய ஆசிரியை அருணிகா அசங்கவின் உயிர் நீர்ப்பானது எமது 120 நாள் போராட்டத்திற்கு வலுசேர்த்தது என இலங்கை ஆசிரியர் சேவா சங்கத்தின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் போராட்டத்திற்கு ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து அவர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
120 நாட்கள் கடுமையான அர்ப்பணிப்பான உன்னதமான போராட்டத்தின் மூலமே 24 வருடங்களாக இழுத்தடிக்கப்பட்டு வந்த அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாடானது வெற்றியையும் எட்டியுள்ளது.
இந்த வகையில் வெற்றிக்காக ஒத்துழைத்த அதிபர்கள், ஆசிரியர்கள், ஆசிரியர் ஆலோசகர்கள், ஊடக நண்பர்கள், ஏனைய தொழிற்சங்கங்கள், மத தலைவர்கள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் மற்றும் பெற்றோருக்கும் இலங்கை ஆசிரியர் சேவா சங்கம் சார்பாக நன்றிகளைக் கூறுகின்றோம்.
அத்துடன் நேற்று முன்தினம் இடம்பெற்ற போராட்டத்தில் தெனியாய மத்திய கல்லூரியின் ஆரம்ப பிரிவு ஆசிரியை ஏ டி அருணிகா அசங்கவின் உயிர் நீர்ப்பானது இந்த போராட்டத்திற்கு மேலும் வலுசேர்த்திருந்தது என்பதனையும் மறந்து விட முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
