ஜெனிவாவிற்கு கடிதம் அனுப்பியவர்கள் மீது நடவடிக்கை இல்லை - மாவை
ஜெனிவாவிற்கு அனுப்பப்பட்டதாக கூறப்படும் கடிதம் தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களிடம் விளக்கம் கோரி சத்தியலிங்கத்தால் அனுப்பப்பட்ட கடிதத்தின் அடிப்படையில் யாரின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படாது என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
ஜெனிவாவுக்கு கடிதம் அனுப்பியதாக பகிரங்கமாகியுள்ள ஆவணத்தில் காணப்படும் கையொப்பங்கள் தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 8 உறுப்பினர்களிடத்தில் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் வைத்தியர் ப.சத்தியலிங்கம் கோரியதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48ஆவது கூட்டத்தொடர் ஆரம்பாக முன் இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் மற்றும் நீதி விசாரணையை வலியுறுத்தி இலங்கை தமிழரசுக் கட்சியின் அங்கத்தவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களுமான சிவஞானம் சிறீதரன், சாள்ஸ் நிர்மலநாதன், தவராசா கலையரசன் ஆகியோரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், ஆர்.யோகேஸ்வரன், என்.சிறிநேசன், ஈ.சரவணபவன் மற்றும் மட்டக்களப்பு மாநகரசபை மேயர் சரவணபவன் உள்ளிட்டோர் கையொப்பமிட்டதாக கூறப்படும் ஆவணமொன்று பகிரங்கமாகியிருந்தது.
இவ்வாறான நிலையிலேயே நேற்று, உறுப்பினர்களிடத்தில் குறித்த விடயம் சம்பந்தமாக தெளிவுப்படுத்துமாறு கோரிக்கை விடுத்து பதில் பொதுச் செயலாளரால் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனும் கடிதத் தலைப்பில் கையொப்பமிட்டமை தொடர்பாக என்று தலைப்பிடப்பட்டுள்ள அந்த கடிதத்தில் மேலும், ஜெனிவாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மனித உரிமை ஆணைக்குழு கூட்டத்தொடரில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கு சமர்ப்பிப்பதற்காக தமிழ்த் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்று குறிக்கப்பட்ட கடிதத் தலைப்பில் ஓர் கடிதம் வரையப்பட்டு இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் 9 பேர் கையொப்பமிட்டு அனுப்பியதாக ஊடகங்கள் மூலமாக அறியக் கூடியதாகவுள்ளது.
அக்கடிதத்தில் தாங்களும் கையொப்பமிட்டீர்களா என்பதை அறியத்தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
தற்போது உள்ள கோவிட் நிலை காரணமாக கடிதப்போக்குவரத்து சீராக நடைபெறாமையால் தங்களது பதிலையும் மின்னஞ்சல் மூலமாக அல்லது சமூக ஊடக தொடர்பாடல் செயலிகள் மூலமாக அறியத்தருமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறான சூழ்நிலையில், இந்த விடயம் தொடர்பில் மாவை சேனாதிராசாவுடன் தொடர்பு கொண்டு கேட்ட போது சத்தியலிங்கத்தால் அனுப்பப்பட்ட கடிதத்தின் அடிப்படையில் யாரின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படாது.
இந்த விடயம் தற்கால சூழ்நிலையில் பேசப்பட வேண்டிய விடயமும் அல்ல. இவற்றை கடந்து இனம் சார்ந்து பல்வேறுபட்ட அரசியல் வேலைத்திட்டங்களை செய்வதே காலத்தின் கட்டாயமாக உள்ளது எனவும் மேலும் தெரிவித்தார்.

அமெரிக்காவில் பிறந்தவர்களை நாடுகடத்துவதுதான் அடுத்த வேலை: அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் சூசகம் News Lankasri

253 பந்துகளில் 266 ரன் விளாசிய வீரர்! 228 ரன் குவித்த கேப்டன்..ஒரே இன்னிங்சில் இருவர் இரட்டைசதம் News Lankasri
