வெடுக்குநாறி விவகாரம் : தொல்லியல் திணைக்களத்தால் பொலிஸாருக்கு அனுப்பட்ட கடிதம்
வெடுக்குநாறிமலையில் வழிபாடுகள் முன்னெடுப்பதற்கு முன்னரே தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தால் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்திற்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
நீதிமன்றில் ஏற்கனவே வழக்கு விசாரணை செய்யப்பட்டு வரும் சர்ச்சைக்குரிய தொல்லியல் இடமான வவுனியா வெடுக்குநாரி தொல்லியல் இடத்தில் விசேட சிவன் ராத்திரி பூஜை வழிபாடுகளை மேற்கொள்ள ஒரு தரப்பு ஆயத்தங்களை மேற்கொண்டு வருவதாக வவுனியா பிரதேச தொல்லியல் திணைக்கள துணைப் பணிப்பாளர், ARCH/NP/VA/EXP/03-11/23/2024 என்ற இலக்கத்தைக் கொண்ட கடிதம் ஒன்றை 2024-03-06ம் திகதி அனுப்பி வைத்துள்ளார்.
இந்த பூஜை வழிபாடுகளுக்கு அனுமதி வழங்குமாறு ஒரு சில அமைப்புக்கள் வவுனியா நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ள போதிலும், அவ்வாறான விசேட பூஜை வழிபாடுகளை நடாத்துவதற்கு அனுமதி வழங்க முடியாது என B340/23 என்ற வழக்கு தொடர்பில் 2024/01/04 திகதி நீதவானினால் தீர்ப் வழங்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த உத்தரவினை கருத்திற் கொள்ளாது ஒரு சில தரப்புக்கள் விசேட பூஜை வழிபாடுகளில் ஆயத்தமாகி வருவதாக எனக்கு தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.
மேலதிக பூஜை வழிபாடுகள்
தொல்லியல் பெறுமதியுடைய பல்வேறு இடங்களைக் கொண்ட வனப் பாதுகாப்பு வலயத்தில் இரவு நேரத்தில் இவ்வாறான பூஜை வழிபாடு நடத்தப்பட்டால் இப்போது மேற்கொள்ளப்பட்ட அழிவுகளை விடவும் கூடுதலான அழிவுகள் ஏற்படும் என்பதுடன் பொதுமக்கள் கலகத்தில் ஈடுபடக்கூடிய சாத்தியம் உருவாகும்.
எனவே இந்த இடத்தில் பகல் நேரத்தில் மேற்கொள்ளப்படும் வழிபாடுகளை தவிர்ந்த மேலதிக பூஜை வழிபாடுகளில் ஈடுபடுவதனை தடுக்கும் வகையில் உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன். என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கடிதத்தின் பிரதிகள் பௌத்த சாசன மற்றும் கலாச்சார அமைச்சின் செயலாளர், பொலிஸ் மா அதிபர், பொலிஸ் திணைக்களம் கொழும்பு 1, சுற்றாடல் பாதுகாப்பு கேந்திர நிலைய பணிப்பாளர் – கொழும்பு 5, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி – நெடுங்கேணி மற்றும் தொல்லியல் திணைக்கள வவுனியா பிராந்திய துணை பணிப்பாளர் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளது.





