கல்முனை ஆதார வைத்தியசாலையில் நிலவும் இரத்தப்பற்றாக்குறை (Photos)
கல்முனை ஆதார வைத்தியசாலையில் பாரியளவில் இரத்தப்பற்றாக்குறை நிலவுவதாக கல்முனை ஆதார வைத்தியசாலை இரத்த வங்கியின் வைத்தியர் எஸ்.திலக்ஸி (S.Thilaksi) தெரிவித்துள்ளார்.
கல்முனை ஆதார வைத்தியசாலையில் நிலவும் இரத்தப்பற்றாக்குறையினை தீர்க்கும் வகையில் இரத்ததான முகாம்களை நடாத்துமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளின் அடிப்படையில் மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட கோட்டைக்கல்லாறில் இரத்ததானம் ஒன்று நடாத்தப்பட்டுள்ளது.
கல்முனை ஆதார வைத்தியசாலை எஸ்.திலக்ஸியின் தலைமையிலான குழுவினரால் இரத்ததானமுகாம் நடாத்தப்பட்டுள்ளது.
கோட்டைக்கல்லாறு சமூக உயர்கல்வி சேவைகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த இரத்ததானமுகாம் கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் நடைபெற்றுள்ளது.
புலம்பெயர் மக்களின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்ட இரத்ததானமுகாமில் பெருமளவான இளைஞர், யுவதிகள் கலந்துகொண்டு இரத்தம் வழங்கியதை காணமுடிந்தது.
தற்போது நாட்டில் நிலவும் கோவிட் தொற்று உள்ள சூழலில் வைத்தியசாலைகளில் பாரியளவில் இரத்தப்பற்றாக்குறை நிலவும் நிலையில் இவ்வாறான இரத்ததான முகாம்கள் ஊடாக இரத்தப்பற்றாக்குறையினை ஓரளவு நிவர்த்தி செய்ய முடியும் என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.










