மஸ்கெலிய ஓல்டன் தோட்டத்தில் சிறுத்தையின் சடலம் கண்டெடுப்பு
மஸ்கெலிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமிமலை பகுதியில் உள்ள ஓல்டன் தோட்டத்தின் கிங்கோரா பிரிவில், சிறுத்தையொன்றின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இன்று(12) பிற்பகல் சுமார் 2 மணியளவில் தோட்டத்தில் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் குழுவினர், வனப்பகுதியில் சிறுத்தை ஒன்று இறந்த நிலையில் கிடப்பதை அவதானித்துள்ளனர்.
இதனையடுத்து, தொழிலாளர்கள் உடனடியாக தோட்ட நிர்வாகத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர். பின்னர், தோட்ட முகாமையாளர் சம்பவம் தொடர்பில் மஸ்கெலிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ். எஸ். புஷ்பகுமாரவிற்கு அறிவித்துள்ளார்.
சடலம் கண்டெடுப்பு
தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு பொலிஸார் மற்றும் வனவிலங்கு அதிகாரிகள் தொடர்பு கொண்டு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

நல்லத்தண்ணியா வனவிலங்கு அலுவலக அதிகாரிகளின் தலையீட்டுடன், இறந்த நிலையில் காணப்பட்ட சிறுத்தையின் சடலம் தற்போது மீட்கப்பட்டு பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், சிறுத்தை உயிரிழந்ததற்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.