பொருட்களை பதுக்கி வைத்து மக்களை ஏமாற்ற முனைவோருக்கு எதிராக நடவடிக்கை : பூ.பிரசாந்தன்
பொருட்களைப் பதுக்கி வைத்து மக்களை ஏய்க்க யார் முனைந்தாலும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ. பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு அவர் அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வாழ்வாதாரத்திற்காகப் போராடி வருகின்றனர்.
அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள பணிப்புரை
இந்நிலையினை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு ஏய்க்க முற்படுவார்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவரும் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் உரிய அதிகாரிகளுக்குப் பணிப்புரை வழங்கியுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக அரிசியின் விலையானது இடத்துக்கிடம் வெவ்வேறு விலைகளில் விற்பனை செய்யப்படுகிறது. இது தொடர்பாக மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தனின் கவனத்திற்கு மக்கள் கொண்டு வந்ததினைடுத்து இந்த பணிப்புரையினை சிவனேசதுரை சந்திரகாந்தன் வழங்கியிருந்தார்.
பொருட்களுக்கான விலையேற்றம் மற்றும் பொருட் தட்டுப்பாடுகள் எனப் பல சுமைகளை மக்கள் சிரமத்துக்கு மத்தியில் சுமக்கின்றனர். இந்நிலையில் அரசியல் தலைமைகள், அதிகாரிகள், வியாபாரிகள் என அனைவரும் இணைந்து மக்களை வலுவாக்க வேண்டும்.
அரசின் சுற்றுநிருபங்களுக்க அமைய உரியச் சட்ட நடவடிக்கை
மாறாக மரத்தால் விழுந்தவனை மாடு மிதிப்பது போன்று திட்டமிட்ட வகையில் பொருட்களுக்கான விலையேற்றம் மற்றும் பொருட்களைப் பதுக்கி வைக்கின்ற சிலர் கொள்ளை லாபம் பெற முனைவதும் திட்டமிட்டு மக்களைக் குழப்பிக் குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பது போன்று பொருட்களைப் பதுக்கி வைக்கின்றனர்.
இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடும் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராகத் தயவு தாட்சண்யமின்றி அரசின் சுற்றுநிருபங்களுக்க அமைய உரியச் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
மேலும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருடம் ஒன்றிற்கு 50 தொடக்கம் 70 வரையிலான மெட்ரிக் தொன் அரிசி தேவைப்படுகின்றது. அதேவேளை இம்முறை இடைப் போகத்தில் 80 ஆயிரம் ஏக்கர் நெற்செய்கையில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
இதன் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடைப்போகத்தில் 112 மெற்றிக் தொன் நெல்லூற்பத்தி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவற்றில் அதிகமானவை வெளி மாவட்டங்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.
ஆகவே இவ்விடயம் தொடர்பாகவும்
மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்களின் அரிசித் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய
அளவிற்கான செயற்பாடுகளையும் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் மாவட்ட
அபிவிருத்திக் குழுத் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தனினால்
அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது'' இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.



