சர்ச்சைக்குரிய துறையூர் மீன் சந்தை தொடர்பில் சட்ட நடவடிக்கை
துறையூர் மீன்சந்தை வரி அறவீடு, விவகாரம் தொடர்பில் சட்ட ரீதியான நடவடிக்கைக்கு செல்லவுள்ளதாக தவிசாளர் சி.அசோக்குமார் அறிவித்துள்ளார்.
வேலணை பிரதேச சபையினால் விட்டுக்கொடுப்பு, நெகிழ்வுப் போக்குடன் பல தடவைகள் சந்தர்ப்பம் வழங்கப்பட்டும் துறையூர் மீன்சந்தை வரி அறவீடு, விவகாரத்துக்கு அப்பகுதி துறைசார் தரப்பினரோ கடற்றொழில் சங்கங்களோ ஒத்துழைப்போ சாதகமான போக்கையோ வழங்காமையினால் குறித்த சந்தை தொடர்பில் சட்ட ரீதியான நடவடிக்கைக்கு செல்லவுள்ளதாக அறிவித்துள்ளார்.
வேலணை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று காலை 10 மணிக்கு தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது.

பகிரங்க கேள்வி கோரல்
இதன்போது குறித்த சந்தை 2026 ஆம் ஆண்டுக்கான பகிரங்க கேள்வி கோரலில் உள்வாங்கப்படமை தொடர்பில் உறுப்பினர் சுவாமிநாதன் பிரகலாதனால் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதற்கு பதிலளிக்கையிலேயே தவிசாளர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
துறையூர் மீன் சந்தை, குத்தகை மற்றும் வரி அறவீடு குறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கையால் நீண்ட காலமாக சர்ச்சையுடன் கூடிய பேசுபொருளாக இருந்து வருகின்றது.
குறிப்பாக குறித்த விடயம் தொடர்பில் பிரதேச சபை வரி அறவீடு செய்ய வலியுறுத்தியதுடன் அது தொடர்பிலான சபையின் சுற்றுநிரூபங்களையும் குறித்த தரப்பினருக்கு காண்பித்திருந்தது.
ஆனால் குறித்த சந்தை இறங்குதுறை என்றும் தாம் வரி அறவீட்டை எதிர்ப்பதாகவும்,தமது அறுவடை மீன்களை மொத்தமாக விற்க இலவசமாக அனுமதிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
வேலணையின் தீரா பிரச்சினை
இந்நிலையில் வேலணையின் தீரா பிரச்சினையாக உருவெடுத்துள்ள குறித்த துறையூர் சந்தையின் தீர்வுக்காக உள்ளூராட்சி ஆணையாளருக்கு ஆலோசனை கடிதம் அனுப்பியிருந்தோம். அவர்கள் பிரதேச சபை சட்டத்தின் பிரகாரம் பிரதேச சபையையே நடவடிக்கை எடுக்குமாறு எமக்கு பதில் கடிதம் அனுபியுள்ளனர்.
இந்நிலையில் மீண்டும் அவர்களுக்கு இன்று வரை (19) ஒரு சந்தர்ப்பம் வழங்கியிருந்தேன். அதையும் அவர்கள் உதாசீனம் செய்துள்ளனர்.
இதன் அடிப்படையில் குறித்த சந்தை தொடர்பில் எத்தகைய சட்ட நடவடிக்கை எடுக்க முடியுமோ அது தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு பிரதேச சபையின் இழக்கப்படும் வருமானம் மீள ஈட்டப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |