டெங்கு நுளம்பு பெருகும் வகையில் சூழலை வைத்திருந்த 21 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
மட்டக்களப்பு - வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் பதினாராம் திகதி வரை டெங்கு பரவும் வகையில் சூழலை வைத்திருந்த 21 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி தேவராஜமுதலி ஸ்டீப் சஞ்ஜீவ் தெரிவித்துள்ளார்.
வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் வாழைச்சேனை, புதுக்குடியிருப்பு, பேத்தாழை, நாசிவந்தீவு, கண்ணகிபுரம் ஆகிய கிராமங்களில் டெங்கு நுளம்பு குடம்பிகள் காணப்படுகின்ற இடங்களை அடையாளப்படுத்தி மக்களுக்கு தெளிவூட்டும் நடவடிக்கையும், வீட்டு வளாகங்களை பரிசோதனை செய்யும் நடவடிக்கையும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.
அந்தவகையில் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி தேவராஜமுதலி ஸ்டீப் சஞ்ஜீவ் வழிகாட்டலில் புதுக்குடியிருப்பு கிராம சேவகர் பிரிவில் வீட்டு வளாகம் பரிசோதனை செய்யும் நடவடிக்கை பொது சுகாதார பரிசோதகர் என்.எம்.எம்.சிஹான் தலைமையில் நடைபெற்ற போது பொதுச் சுகாதார பரிசோதகர் அலுவலக டெங்கு வெளிக்க உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு வீடுகள் மற்றும் பொது இடங்கள் என்பவற்றை பரிசோதனைக்கு உட்படுத்தியிருந்தனர்.
வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இம்மாத ஆரம்பத்தில் 192 பேருக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், 21 நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சிவப்பு எச்சரிக்கை வழங்கப்பட்டவர்களுக்கு 7 அல்லது 14 நாட்கள் வரையில் அவர்களுடைய இடங்கள் சுத்தம் செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருவதுடன், சுத்தம் செய்யாமல் காணப்படும் சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




